பிரிக்கக் கூடாதது - சட்டமும் அறமும்!

 




பிரிக்கக் கூடாதது  - சட்டமும் அறமும்! 


(சூரத்துல்_பகரா_சிந்தனைகள்)


மார்க்க சட்டங்களை மக்களுக்கு விளக்கும்போது, அந்தச் சட்டங்களுக்குப்பின்னே பொதித்து வைக்கப்பட்டிருக்கும் நற்குணங்கள் (அஃக்லாக்) பற்றிச் சொல்லத் தவறி விடக்கூடாது. இது குர்ஆனின் வழிமுறை மட்டுமல்ல; நபியவர்களின் வழிமுறையும் கூட! 

இதோ ஒரு சான்று - திருக்குர்ஆனிலிருந்து: 


திருமறையின் இரண்டாவது அத்தியாயம் சூரத்துல் பகரா - வின் கடைசிப் பகுதியிலே - வட்டி - குறித்து மிகக் கடுமையாக சாடுகின்ற இறை வசனங்கள் இடம்பெற்றிருப்பதை நாம் அறிவோம். பார்க்க இறை வசனங்கள் (2: 275 - 280)


***


ஆனால் - வட்டியைப் பற்றி வருகின்ற இந்த இறை வசனங்களுக்கு முன்னால் இந்த அத்தியாயம் பேசுவது - தர்மத்தைப் பற்றித் தான் என்பதை நாம் கவனிக்கத் தவறி விடக்கூடாது!


பார்க்க (2:261-274)


தர்மத்தைப் பற்றிப்பேசுகின்ற இந்த இறை வசனங்களில் - இறைவன் சட்டங்கள் எதனையும் குறிப்பிடவில்லை. நல்லுபதேசம் மட்டுமே. அற விழுமியங்கள் பற்றி மட்டுமே!


ஏன் தர்மம் செய்திட வேண்டும்? தர்மம் செய்வதால் என்னென்ன நன்மைகள்? 


எவ்வாறு தர்மம் செய்திட வேண்டும்? எவ்வாறெல்லாம் தர்மம் செய்திடக் கூடாது? 


வெளிப்படையான தர்மமா? யாருக்கும் தெரியாமல் செய்யும் தர்மமா? எது சிறந்தது? 


தர்மம் செய்வதில் முன்னுரிமை  யாருக்கு? 


தர்மம் செய்வதைத் தடுப்பவர் யார்? 


தர்மம் செய்வோர்க்கு அல்லாஹ் தரும் வாக்குறுதி என்ன? 


இவ்வாறு தர்மத்தைப் பற்றிய இறை வசனங்களுக்குப் பின்னர் தான் கடன் குறித்தும் வட்டி குறித்துமான தலைப்புக்குள் வருகிறது இந்த அத்தியாயம். 


***


அடுத்து கடன்-வட்டி குறித்த வசனங்களை எடுத்துக் கொள்வோம். 


2:275

--------

{{ யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்ட 

ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் வேறுவிதமாய் எழ மாட்டார்கள். }}  


- என்ற ஒரு கடுமையான எச்சரிக்கையுடன் தான் துவங்குகிறது  இந்தப் பகுதி! (ஏன் இந்தக் கடுமை என்பதை இறுதியில் பார்ப்போம்.) 


இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இதே இறை வசனத்திலேயே - இறைவனின் இரண்டு சட்டங்கள் - இங்கே பிரகடனப்படுத்தப்பட்டு விடுகின்றன! 


{{ அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்.}} (2:275)  


***


அடுத்த இறை வசனம் - வட்டியின் தன்மை பற்றியும் தர்மத்தின் தன்மை பற்றியும் குறிப்பிடுகிறது. 


2:276 (PART)

-------

{{அல்லாஹ் வட்டியை அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை பெருகச் செய்வான்.}} 


அடுத்த இறை வசனம் - தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்துப் பேசுகிறது! இறை வணக்கத்தையும் ஏழைகளின் உரிமையையும் சேர்ந்தே நிறைவேற்றப் பணிக்கிறது இவ்வசனம். 


2:277

-------


{{ யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.}} 


***


அடுத்த இறை வசனம் - இறை நம்பிக்கையும் - வட்டி வாங்கி உண்பதும் ஒன்றுக்கு ஒன்று நேர் எதிரானது என்ற பார்வையை முன் வைக்கிறது.  


2:278

-------

{{ ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.}}


***


அடுத்த இறை வசனம் வட்டி குறித்த மிகக் கடுமையான இஸ்லாமியப் பார்வையை முன் வைக்கிறது!


2:279 (PART)

-------

{{ இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள். }}


***


இந்த இடத்தில் சற்றே நிறுத்தி  - வட்டி - குறித்து ஏன் இவ்வளவு கடுமையான எச்சரிக்கைகளை இஸ்லாம் முன் வைக்கிறது என்பது குறித்துச் சிந்திப்போம். 


கடன் வாங்குபவன் யார்? தன் தேவைகளை (HUMAN NEEDS) நிறைவேற்றிக் கொள்வதற்கு கடன் வாங்கித் தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்படுபவன்  யார்? 


வசதியற்றவனா? வசதி படைத்தவனா? 


சரி! யாரால் கடன் கொடுக்க முடியும்? தன் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டதற்குப் பிறகு எஞ்சியிருப்பதை சேமித்து வைத்திருப்பவனா? அல்லது முடைப்பட்டவனா? 


செல்வந்தன் ஒருவன் தானே கடன்கொடுக்க முன் வர முடியும்? 


சரி, அந்தச் செல்வந்தனைப் பார்த்து ஒரு சில கேள்விகள் கேட்போம்.


"உனது உழைப்பாலேயோ, அல்லது திறமையினாலேயோ, அல்லது வியாபாரத்தினாலேயோ - தானே  இவ்வாறு சம்பாதித்து உன்னால் சேமிக்க முடிந்தது?" 


"அப்படியிருக்க - ஒருவனது கஷ்டமான சூழ்நிலையை - உனக்குச் சாதகமாக்கிக் கொண்டு  முடைப்பட்டு விட்ட ஒருவனிடமிருந்தும் - நீ பொருள் சம்பாதிக்கத் தான் வேண்டுமா?"

 

இந்தக் கேள்வியில் நியாயம் இருக்கிறதா,  இல்லையா? 


உதாரணத்துக்குக் கேட்போம். ஒரு பிச்சைக் காரனுக்கு நீங்கள் ஏதாவது கொடுப்பீர்களா? அல்லது அவனிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வீர்களா? 


இப்போது புரிகிறதா - வட்டி என்பது எப்படிப்பட்டதொரு அநியாயம் என்று? வட்டி குறித்து ஏன் இறைவன் இவ்வாறு கடுமை காட்டுகின்றான் என்று? 


***


ஒரு பக்கம் முடைப்பட்டவன். கடன் வாங்கியவன். இன்னொரு பக்கம் கடன் கொடுத்தவன். வசதி படைத்தவன்.  இந்த இடத்தில் தான் இறைவன் வந்து நிற்கின்றான் - அந்த இருவருக்கும் மத்தியில்! நீதிபதிகளுக்கெல்லாம் நீதியரசனான அந்த இறைவன் இந்த விஷயத்தை எப்படிக் கையாள்கிறான்; எப்படி நடந்து கொள்கிறான் என்பதை கவனியுங்கள்.


முதலில் சட்டங்களை முன் வைத்த இறைவன் அடுத்து என்ன சொல்கிறான் என்பதைக் கவனியுங்கள்! 


எடுத்த எடுப்பிலேயே வட்டியைத் தடை செய்திடும் சட்டத்தில் கடுமை காட்டிய இறைவன் அடுத்துப் பேசுவது -  நியாயத்தைப் பற்றித்தான்! கடன் கொடுத்தவரின் உரிமையைப் பற்றித் தான்!


வட்டி விஷயத்தில் கடுமை காட்டிய அதே இறை வசனத்திலேயே கடன் கொடுத்தவருக்கு அதன் அசல் தொகை திருப்பிக் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்று அவரின் உரிமையை நிலை நிறுத்துகிறான் இறைவன்.      


2:279 (PART)

-------

{{ உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.}}


இந்த இடத்தில் - இறைவன் - சட்டத்தையும் நியாயத்தையும் இணைத்திருக்கின்றானா இல்லையா?  


***

அடுத்து வரும் வசனம் தான் க்ளைமாக்ஸ்! இங்கே தான் மனிதனின் இயல்புக்குள் பொதித்து வைக்கப்பட்டிருக்கும் அற விழுமியங்களில் (MORALITY AND ETHICS)  முதன்மை வகிக்கும் இரக்க உணர்வைத் (MERCY AND COMPASSION) தட்டி எழுப்புகின்றான் இறைவன். 


கடன் கொடுத்தவனுக்கு முன்னே இரண்டு "தேர்வுகளை" முன் வைக்கிறது அடுத்த வசனம்


2:280

-------

((கடன்பட்டவர் கஷ்டத்தில் இருப்பின் வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், தர்மமாக விட்டுவிடுவீர்களானால் - நீங்கள் அறிவீர்களானால் - உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.))


இறைவன் மிகத் தூய்மையானவன்! சுப்ஹானல்லாஹ்!


இறைவன் யார் பக்கம் நின்று கொண்டு பேசுகிறான் என்பதை கவனித்தீர்களா? கடன் கொடுத்தவனிடம் எப்படி ஒரு "வேண்டுகோளை" முன் வைப்பது போல் பேசுகிறான் என்பதைக் கவனித்தீர்களா? 


முடைப்பட்டுக் கடன் வாங்கி விட்டு - அதனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் விழி பிதுங்கிய நிலையில் நிற்கும்  - கடன் வாங்கியவன் பக்கம் நிற்கின்றான் இறைவன்!


அப்படியானால் - முடைப்பட்ட ஏழையிடமே அவனது இயலாமையைத் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு அவனிடமிருந்தும் வட்டியின் மூலம் பணம் பறிக்க  விரும்பும்  அந்தச் செல்வந்தன் பக்கம் நிற்பவன் யார்? 


அவன் தான் ஷைத்தான்! அதனைத் தான் எடுத்த எடுப்பிலேயே அடித்துச் சொல்லி விடுகின்றான் இறைவன்! 


2:275

--------

{{ யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்ட 

ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் வேறுவிதமாய் எழ மாட்டார்கள். }}  


கடுமை ஏன் என்பது இப்போது புரிகிறதா? 


***


கொஞ்சம் ஆழமாக சிந்தித்து ஓதினோம் என்றால் சட்டம் - நியாயம், உரிமைகள், அற விழுமியங்கள் -  எல்லாம் எவ்வாறு திருக்குர்ஆனில் பின்னிப்பிணைக்கப் பட்டிருக்கின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்!


@@@


பின் குறிப்பு:  ஷெய்ஃக் காலித் அபூ அல் ஃபள்ல் அவர்களின் திருக்குர்ஆன் விரிவுரையில் இருந்து உணர்வு பெற்று எழுதப் பட்ட பதிவு இது. 


இந்த உதாரணத்தில் சொற்பொழிவாளர்களுக்கு மிக அழகிய பாடம் ஒன்று இருக்கிறது! அது தான் மார்க்கச் சட்டங்களை மட்டும் திருமறையின் வசனங்களிலிருந்து தனியே பிரித்தெடுத்து  சொற்பொழிவாற்றுவதைத் தவிர்த்து, அந்தச் சட்டங்களுக்குப் பின்னே இருக்கின்ற அற விழுமியங்களையும் சேர்த்துப் பேசிடத் தவறி விட வேண்டாம் என்பதே அந்தப் பாடம்!


அல்லாஹ்வே மிக அறிந்தவன்.  


நீடூர் எஸ் ஏ மன்ஸூர் அலி 


@@@

Comments