இது ஒரு சமிக்ஞை தான்!





எனதருமைப் பேச்சாளர்களே! அறிஞர் பெருமக்களே!


ஒரே ஒரு குர்ஆன் வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு - அல்லது - ஒரு வசனத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு உங்கள் சொற்பொழிவைத் திட்டமிடாதீர்கள். அப்படிப்பேசி வந்த காலம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது! புரிந்து கொள்ளுங்கள்!   


அது போலவே - ஒரே ஒரு ஹதீஸை வைத்துக் கொண்டும்  உங்கள் சொற்பொழிவைத் திட்டமிடாதீர்கள். அது ஆபத்தில் போய் முடியும்! யதார்த்தம் அது தான்!


ஒரு சில குர் ஆன் வசனங்களை எடுத்துக்  கொள்கிறீர்கள்; ஒரு சில ஹதீஸ்களையும் எடுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் அந்த இறை வசனங்கள் எந்தச் சூழலில் வைத்து இறக்கியருளப்பட்டது என்பதையும் பார்க்காமல், அந்த நபிமொழிகள் எந்தப் பின்னணியில் வைத்துச் சொல்லப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் - உங்கள் உங்கள் சொற்பொழிவைத் திட்டமிடாதீர்கள். அது குழப்பத்தில் போய் முடியும்!  


நபிமொழியைப் பொறுத்தவரை - ஒரு விஷயம் குறித்த பல அறிவிப்புகளில்  - ஒன்றை மட்டும் படித்து விட்டு முன் முடிவு எதற்கும் வந்து விடாதீர்கள். (partial narrations). அது தவறான விளக்கமாக ஆகி விடும். Wrong interpretation. 


நமது காலத்துச் சூழல் ஒன்றுக்கு - ஒரு இறை வசனத்தையோ அல்லது நபிமொழியையோ பொருத்திப் பார்க்கும்போது - மிகுந்த எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் - மாட்டிக் கொள்வீர்கள்! 


மார்க்க சட்டங்களை மக்களுக்கு விளக்கும்போது, அந்தச் சட்டங்களுக்குப்பின்னே பொதித்து வைக்கப்பட்டிருக்கும் நற்குணங்கள் (அஃக்லாக்) பற்றிச் சொல்லத் தவறி விடாதீர்கள். இது குர்ஆனின் வழிமுறை மட்டுமல்ல; நபியவர்களின் வழிமுறையும் கூட! சட்டங்களை மட்டும் பேசினால் - கருத்து வேறுபாடுகள் - சூடான விவாதங்கள் - எல்லாம் தூள் பறக்கும். ஆனால் நற்பண்புகளைப் பேசினால் அது நம்மை ஒருங்கிணைத்து விடும். அங்கே கருத்து வேறுபாடுகளுக்கு இடமே இல்லை.  


நமக்கு வழங்கப்பட்டிருக்கும் ஷரீஅத் பல உன்னதமான உயர் இலக்குகளோடு (higher objectives) இணைக்கப்பட்டிருக்கிற அகலமான பாதை! Maqasid as Shariah. அது பற்றிக் கொஞ்சமேனும் அறிந்து கொண்டு மக்களிடம் செல்லுங்கள்!  உங்கள் பேச்சு சிறக்கும்! 

   

மக்கள் மீது இரக்கம் காட்டுங்கள்; கடுமை வேண்டாம். 


ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்! காலம் மாறி விட்டது. தலைமுறைகள் மாறி விட்டன. புதிய தலைமுறைகள் நம்மை விட வேகமாக சிந்திக்கிறார்கள். நம் மார்க்கம் உலகளாவிய மார்க்கம். இறையச்ச மிக்க மார்க்க அறிஞர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். அவர்களது ஆய்வுப் பேருரைகள் இணைய தளத்தில் எளிதில் கிடைத்து விடுகின்ற காலம் இது! இந்தச் சூழலை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால் நமக்கும் மக்களுக்குமான தகவல் பரிமாற்ற இடைவெளி (communication gap) -  நிரப்ப முடியாத அளவுக்கு  விரிவடைந்து விடும். 


உரைகளைத் தயாரிக்கும்போது கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள். Prepare well. வயதிலும் அறிவிலும் மூத்த ஆலிம் பெருமக்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். பேச்சில் பக்குவத்தைக் கடைபிடியுங்கள், Maturity. உணர்ச்சி வசப்பட்டு குரலை உயர்த்தி ஆவேசமாகப் பேசிடத் தேவையில்லை! Avoid emotioanal speech. 


நம் சமூகத்தில் - சில சமயங்களில் - ஒரு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறி விடுகின்றன. அவை ஒவ்வொன்றும் - நமது சூழலை நாம்  புரிந்து நடந்து கொள்வதற்காக - வல்லோன் அல்லாஹ் அனுமதித்து விடுகின்ற "சமிக்ஞைகள்" தாம்! Pointers. பாடமும் படிப்பினையும் பெற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான்!   


பொது மக்களுக்காகப் பேசுவது என்பது ஒரு கலை. Public speaking skill. அதனை வளர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயம்! இல்லையேல் பொது வெளியில் பேசுவதைத் தவிர்த்துக் கொள்தல் சமூகத்துக்கு நல்லது! 


இது நலம் நாடி செய்யப்படும் நஸீஹத் மட்டுமே. இதில் உத்தரவுகள் எதுவும் இல்லை! 

***

Comments