பன்மைத்துவம் குறித்த புரிதல் ஒன்று அவசியம்!



குர்ஆனின் பார்வையில் பன்மைத்துவம் (PLURALISM) என்றால் என்ன என்பது குறித்த சரியான பார்வை ஒன்றை இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். 


பன்மைத்துவம் என்பது - இறைவனின் படைப்பு நியதிகளுள் ஒன்றாகும். 


அனைத்தையும் படைத்துக் காக்கும் எல்லாம் வல்ல இறைவன், தன் படைப்பினங்கள் விஷயத்தில் என்றுமே மாறாத சில பொது விதிகளை விதித்து வைத்திருக்கின்றான்! 

மாற்றத்துக்குள்ளாகாத இந்த விதிமுறைகளை - இறை நியதி என்றோ, இறைவனின் வழிமுறை என்றோ, அல்லது பொதுவாக உலகப் பொது விதி (Universal Laws) என்றோ குறிப்பிடலாம். அரபியில் இதனை சுனன் இலாஹிய்யா என்று அறிஞர்கள் அழைக்கிறார்கள்.


இவ்வாறு இறைவனால் விதித்துத் தரப்பட்ட இறை நியதிகள் பல அல் குர்ஆனிலே இடம் பெற்றுள்ளன. அப்படிப்பட்ட இறைவனின் நியதிகள் சிலவற்றை இங்கே குறிப்பிடுவோம். 


1 Unity of Origin / Unity of Creation - படைப்பினங்கள் அனைத்துக்கும் மூலம் - ஒரே இறைவனே!


2 Pairity of Creation - படைப்பினம் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே படைக்கப்பட்டுள்ளன!


3 Diversity of Creation - Sunan al - Ikhtilaaf - படைப்பினங்கள் ஒவ்வொன்றையும், பல வகைகளாகப் பிரித்து வைத்திருப்பவன் இறைவன்! இந்த இறை நியதியையே நாம் பன்மைத்துவம் என்றும் அழைக்கலாம். 


4 Balancing the Creation - எல்லாப் படைப்பினங்களுக்கு மத்தியிலும், ஒரு நடு நிலையை விதித்து வைத்திருப்பவன் இறைவன்!


***

எனவே -  மாற்றத்துக்குள்ளாகாத இறைவனின் படைப்பு விதிகளுள் ஒன்று தான் பன்மைத்துவம் - என்பதை நாம்  புரிந்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.  


இறை மறை வசனங்களுக்குச் செல்வோம். 


1 இயற்கையில் ஒவ்வொன்றும் ஒரு விதம்! (Natural Diversity) 


35:27

-------

நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.


35:28

-------


 இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.


13:4

-----


இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சையும் ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இdருக்கின்றன.


2 அடுத்து மனிதப் படைப்பை எடுத்துக் கொள்வோம்: 


Diversity in Humans

--------------------------


49:13

-------

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். 


30:22

-------

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.



3 சமயங்களிலும், மார்க்கங்களிலும் பன்மைத்துவம் உண்டு!


Religious Diversity  

------------------------


5:48

-----

 மேலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த  வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்ததைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே; எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அதனை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.



11:118

--------

 உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.


***


மார்க்கங்களிலும்  பன்மைத்துவம் உண்டு என்று சொல்லும்போது, கேள்வி ஒன்று கேட்கப்படலாம்.


"அப்படியானால் - இஸ்லாம் எனும் ஒரே மார்க்கம் தானே இறைவனால் அங்கீகரிக்கப்ப்ட்ட மார்க்கமாகும். பன்மைத்துவ விதி இதனுடன் முரண்படவில்லையா?"  


இங்கே நாம் மூன்று விஷயங்களை மனதில் இருத்திட வேண்டியுள்ளது!


1 மனித குலம் முழுமைக்கும் அனுப்பப்பட்ட எல்லா இறைத்தூதர்களின் மார்க்கமும் இஸ்லாம் தான்! 


3:19

------


நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; 


3:83

------

அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.


இஸ்லாம் என்பதை - ஒரு சில குறிப்பிட்ட வணக்க வழிபாடுகளையும் , ஒரு சில சட்ட திட்டங்களையும் கொண்ட ஒரு மார்க்கம் / ஒரு மதம் என்று புரிந்து கொள்வதை விடுத்து, இஸ்லாம்  என்பது எல்லாம் வல்ல இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடந்திட - எல்லா இறைத்தூதர்கள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்ட மார்க்கம் என்ற புரிதல் பல குழப்பங்களுக்கு விடையாக அமைந்து விடும். 


2  நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் எனும் அடிப்படையிலும், அவர்கள் கொண்டு வந்த இறைவேதம் முழுக்க முழுக்கப் பாதுகாக்கப்பட்டஇறை வேதம் எனும் அடிப்படையிலும் - மனித குலம் முழுமைக்கும் அழைப்பு விடுகின்ற மார்க்கமாக இஸ்லாம் விளங்குகிறது என்ற புரிதலும் அவசியம். 


3 முறைப்படியான அழைப்பு விடுப்பதுடன் முஸ்லிம்களாகிய நமது கடமை முடிந்து விடுகிறது; ஏற்பதும் ஏற்க மறுப்பதும் அவரவர் விருப்பம் என்ற நிலைப்பாடு பன்மைத்துவத்தை அங்கீகரிக்கிறது என்ற புரிதலும் அவசியம். 


***


இன்னும் ஒரு கேள்வி இருக்கிறது! 


முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட பின்பும், இறுதி நபியவர்களையும் , அவர்கள் கொண்டு வந்த திருக்குர்ஆனையும் ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களின் நிலை என்ன? அவர்கள் ஈடேற்றம் பெறுவார்களா மாட்டார்களா? அவர்கள் சுவர்க்கம் செல்வார்களா மாட்டார்களா? 


இந்தக் கேள்விக்கு மிகத்தெளிவான பதிலைத் திருக்குர்ஆன் வழங்கினாலும் - முஸ்லிம்களில் பலர் இன்னும் அதனைப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 


2:62

-----

ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.


இந்த இறை வசனத்துக்கு விளக்கம் அளிக்கும் முஹம்மத் அஸத் அவர்கள் பின் வருமாறு குறிப்பிடுகிறார்கள்: 


".... the idea of "salvation" is here made conditional upon three elements only: belief in God, belief in the Day of Judgment, and righteous action in life." 


"இந்த இறை வசனம் மனிதர்கள் ஈடேற்றம் பெறுவதற்கு நிபந்தனையாக மூன்றே மூன்று அடிப்படைகளைத் தான் முன் வைக்கிறது.  ஒன்று: இறை நம்பிக்கை; இரண்டு: தீர்ப்பு நாள் பற்றிய நம்பிக்கை; மூன்று: நற்செயல்கள் - ஆகிய இந்த மூன்று மட்டுமே!" 


இந்தக் கருத்து திரும்பவும் திரும்பவும் திருக்குர்ஆனில் வலியுறுத்தப் படுகின்றதொரு கருத்தாகும். 


5:69

-----

முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.


***


பன்மைத்துவத்தை மறுத்து - " இறைவனின் இறுதி இறைத்தூதரையும், இறுதி இறை வேதத்தையும் ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களாகிய நாங்கள் மட்டுமே ஈடேற்றத்துக்குரியவர்கள்!" - என்று நாம் சொல்வோமெனில் - யூதர்கள் - " நாங்கள் மட்டுமே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்" ("God's chosen people") என்று சொல்வதற்கு நாம் ஒப்பாகி விடுவோம்!


***


ஒரே மார்க்கத்தைச் சேர்ந்தவர்களிலேயே மிக மிக நல்லவர்களும் உண்டு; மிக மிகக் கெட்டவர்களும் உண்டு! இவ்விரண்டு நிலைகளுக்கும்  இடைப்பட்ட  பற்பல  நிலைகளும் உண்டு! (GRADATIONS)


3:75

------


வேதம் அருளப்பட்டவர்களில் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி நீர் ஒரு செல்வக் குவியலை அவர்களிடம் ஒப்படைத்தாலும், உம்மிடம் அதனைத் திருப்பித் தந்துவிடுவார்கள். அவர்களில் இன்னும் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி ஒரு காசைக் கொடுத்தாலும்கூட நீர் அதற்காக விடாப்பிடியாய் நின்றாலேயொழிய அதனை உம்மிடம் திருப்பித் தரமாட்டார்கள். இதற்கு (அவர்களின் இந்த நாணயமின்மைக்குக்) காரணம் அவர்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருந்ததுதான்: “உம்மிகள் (யூதர் அல்லாதவர்) விஷயத்தில் நாங்கள் அல்லாஹ்வினால் விசாரிக்கப்பட மாட்டோம்!” இவ்வாறு அல்லாஹ்வின் மீது அவர்கள் அப்பட்டமான பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள். ஆனால் (உண்மையில் அல்லாஹ் இதுபோன்ற எதையும் சொல்லவில்லை என்பதை) அவர்கள் நன்கு அறிந்தே இருக்கின்றார்கள்.


***


இறைவனே மிக அறிந்தவன்! 


Comments