சூரா ஆலு-இம்ரான் சிந்தனைகள்

 


பிஸ்மில்லாஹ்... 


கடன் வாங்கிய 

முஸ்லிமுக்கு அழகு 

கடன் கொடுத்தவர் 

அதனைத் திருப்பிக் 

கேட்பதற்கு முன்னரேயே 

கடனைத் திருப்பிச் 

செலுத்தி விடுவதுதான்!

பார்க்க அல்குர்ஆன் 3:75


***


ஹராமை விட்டு விட்டு வாருங்கள்!

உங்களை நான் பலப்படுத்துகிறேன்- 

என்று அழைக்கிறான் இறைவன்!

ஆனால் ஹராமைக் கொண்டு 

ஒரு போதும் நம்மை

பலப்படுத்திக் கொண்டுவிட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளத் 

தவறி விடுகிறோம்!

#சூரா ஆலு இம்ரான் சிந்தனைகள்


***


சேர்த்து வைப்பதில் தான் 

பலம் இருக்கிறது என்று 

நாம் எண்ணுகிறோம்!

ஆனால்..

அல்லாஹ்வின் பாதையில் 

செலவு செய்வதில் தான் 

பலம் இருக்கிறது என்று- 

பறைசாற்றுகிறது 

சூரா ஆலு இம்ரான்!


***

குர்ஆனை நெருங்காமல் 

ஒரு முஸ்லிம்

இறைவனை நெருங்குவதற்கு 

வாய்ப்பே இல்லை!

பார்க்க அல்குர்ஆன் 3:79

நீங்கள் வேதத்தைக்  கற்றுக் கொடுத்துக் கொண்டும்  அதனை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் இறைவனைச் சார்ந்து இருப்பவர்கள் ஆகிவிடுங்கள். (3:79)


***

Article 1 /


இது தான் இஸ்லாம்!

===============


பகுதி - 1 


சூரா ஆலு-இம்ரானிலிருந்து.... 


சூரா ஆலு இம்ரான் திருக் குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம். இது மதினாவில் வைத்து இறக்கியருளப்பட்ட அத்தியாயங்களுள் ஒன்று. குறிப்பாக உஹத் யுத்தத்திற்கு சற்று பின்னர்... 


இந்த சூராவைப் பற்றிய முழுமையான ஆய்வு அல்ல இந்தப் பதிவு....


எனினும் இந்த ஒரே அத்தியாயத்தை மட்டும் திரும்பவும் திரும்பவும் படித்துப் பார்ப்பதன் மூலம் இந்த அத்தியாயத்தில் வைத்து - அல்லாஹ் சொல்ல வருகின்ற ஒரே ஒரு கருத்தை சற்று ஆழமாகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதே இப்பதிவின் நோக்கம். அந்தக் கருத்து - இஸ்லாம் மார்க்கம் என்பது என்ன? இந்த மார்க்கம் - முஸ்லிம் என்று அழைத்துக் கொள்ளக் கூடிய ஒவ்வொருவரிடமும் எதை எதிர்பார்க்கிறது என்பதைத் தொட்டுக் காட்டுவது தான் இப்பதிவின் ஒரே நோக்கம்.


***


இந்த அத்தியாயத்தில் - இஸ்லாம் எனும் சொல் அதன் பல்வேறு வடிவங்களில் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள்: 


3:19 (பகுதி) 

===

திண்ணமாக, இஸ்லாம் (إسلام ) மட்டுமே அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) வாழ்க்கை நெறி (தீன்) ஆகும். 


3:20 (மூன்று விதங்களில் )

===

அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக: “நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன் (أسلمت) ; என்னைப் பின்பற்றியோரும் அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.” தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்: “நீங்களும் வழிப்பட்டீர்களா?” (أ أسلمتم ) என்று கேளும்; அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் (اسلمو) நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.


3:52

===

இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் நிராகரிக்க முனைந்து விட்டதை ஈஸா உணர்ந்து கொண்டபோது, “அல்லாஹ்வின் வழியில் எனக்கு உதவி புரிவோர் யார்?” என வினவினார். ‘ஹவாரிகள்’ - பதிலளித்தார்கள்: “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாய் இருக்கின்றோம். நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். திண்ணமாக நாங்கள் இறை ஆணைக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கும் முஸ்லிம்களாக இருக்கின்றோம் (مسلمون) என்பதற்கு நீரே சாட்சியாக இரும்.


3:64

===

(நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள்  (مسلمون) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.


3:67

===

இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார் (مسلما); அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.


3:80

===

மேலும் அவர், “மலக்குகளையும், நபிமார்களையும் வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் - நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்கள்) (مسلمون)ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?.


3:83

===

இனி அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் தீனை (வாழ்க்கை நெறியை) விட்டு வேறொரு வாழ்க்கை நெறியையா இவர்கள் விரும்புகின்றார்கள்? உண்மை என்னவெனில், வானங்கள், பூமி ஆகியவற்றில் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே கீழ்ப்படிந்து (முஸ்லிமாக) (أسلم) இருக்கின்றன; மேலும் அவனிடமே அவர்கள் அனைவரும் திரும்ப வேண்டியவராய் இருக்கின்றனர்.


3:84

===

“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள்  (مسلمون) ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.


3:85

===

இவ்வாறு அவனுக்குப் பணிந்து வாழும் நடத்தையை (இஸ்லாத்தை) (إسلام) விடுத்து வேறொரு வாழ்க்கை நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால், அவனிடமிருந்து ஒருபோதும் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவரில் ஒருவனாக இருப்பான்.


3:102

====

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக  (مسلمون) அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.


@@@


ஆக சூரா ஆலு இம்ரானில் - மொத்தம் பனிரெண்டு இடங்களில் இச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளதை முதலில் கவனத்தில் கொள்வோம். 


***


இஸ்லாம் என்றால் - கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சரணடைதல், வழிப்படுதல் என்றெல்லாம் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். ஆங்கிலத்தில் இதனை - to surrender; to submit - என்றெல்லாம் மொழிபெயர்க்கப் படுகிறது.  


இறைவனுக்கு அடிபணிதலின் அவசியம் குறித்து இந்த அத்தியாயத்தில் திரும்பவும் திரும்பவும் ஏன் வலியுறுத்தப் படுகிறது என்று பார்க்க வேண்டியது அவசியம். 


***

Article 2


இஸ்லாம் எனும் மார்க்கம் - இயற்கை மார்க்கம்! 

===================================

(இது தான் இஸ்லாம்! - பகுதி - 2)


***


எல்லாவற்றுக்கும் முதலாக - இஸ்லாம் எனும் மார்க்கம் - இயற்கை மார்க்கம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.   


பின் வரும் இறை வசனமே அதற்குச் சான்று!


3:83

===

இனி அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் - வாழ்க்கை நெறியை விட்டு - வேறொரு வாழ்க்கை நெறியையா இவர்கள் விரும்புகின்றார்கள்? உண்மை என்னவெனில், வானங்கள், பூமி ஆகியவற்றில் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே கீழ்ப்படிந்து (أسلم) இருக்கின்றன; மேலும் அவனிடமே அவர்கள் அனைவரும் திரும்ப வேண்டியவராய் இருக்கின்றனர்.


இந்த இறை வசனத்தில் - வானங்கள், பூமி ஆகியவற்றில் உள்ள அனைத்தும் - விரும்பியோ, விரும்பாமலோ - இறைவனுக்கே அடிபணிந்து, சரணடைந்து, கீழ்ப்படிந்தே நடக்கின்றன - என்று இறைவன் குறிப்பிட்டிருப்பதை சற்று கவனிப்போம். 


இயற்கையில் நாம் காணுகின்ற - இறைவனின் - எந்தப் படைப்பினமாக இருந்தாலும் சரி

- அவை ஒவ்வொன்றுக்கும் இறைவன் விதித்திருக்கும் - சட்ட திட்டங்களைத் தான் நாம் - இயற்கைச் சட்டங்கள் (natural laws) என்று அழைக்கிறோம்!     


இயற்கை முழுவதற்கும் - இறைவன் விதித்திருக்கும் - இயற்கைச் சட்டங்களை - இயற்கை ஒருபோதும் மீறுவதில்லை. மாறாக இறைவன் விதித்திருக்கும் இயற்கைச் சட்டங்களுக்கு முற்றிலும் சரணடைந்தே - இயற்கையின் படைப்பினங்கள் ஒவ்வொன்றும் - செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இதனையே "அஸ்லம"  (أسلم) என்ற சொல்லைக் கொண்டு விளக்குகிறது திருமறை! 


இறைவனுக்கு முன்னால் - இயற்கையின் நிபந்தனையற்ற சரணடைதலைத் தான் (unconditional surrender) - இஸ்லாம் எனும் ஒற்றைச் சொல் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. 


இயற்கையின் ஓர் அங்கமாக விளங்குகின்ற மனித சமூகத்துக்கு - மனிதர்களின் தன்மை அறிந்த இறைவனால் வகுத்தளிக்கப்பட்ட இயற்கையான வாழ்க்கை நெறியே - இஸ்லாமிய  வாழ்க்கை நெறியாகும்! 


அதாவது எந்த இயல்பில் வைத்து மனிதன் படைக்கப்பட்டிருக்கின்றானோ - அதே மனித இயல்புக்கேற்ற ஒரு வாழ்க்கை நெறியையே இறைவன் மனித சமூகத்துக்கு விதியாக்கியிருக்கின்றான். அங்கீகரித்திருக்கின்றான். இந்த இயற்கை வாழ்க்கை நெறிக்கு இறைவன் இட்டிருக்கின்ற காரணப் பெயர் தான் - இஸ்லாம் என்பது!


இறைவனிடத்தில் நாம் சரணடைகின்றோம் என்றால் - இறைவன் மனிதர்களுக்கு விதியாக்கியிருக்கின்ற இயற்கைச் சட்டங்களுக்கு அடி பணிந்து வாழ்கிறோம் என்பதே பொருள்! 


***


இஸ்லாம் எனும் சொல்லுக்கு - "அமைதி" - "சாந்தி" (peace) - என்றொரு பொருளும் உண்டு!  அதாவது - ஒவ்வொரு படைப்பினமும் - அதன் இயல்புக்கேற்ற வகையில் - அதனதன் இயற்கைச் சட்டங்களுக்கு - அதாவது இறைவனின் சட்டங்களுக்குச் சரணடைந்து கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும்போது - அதன் விளைவாக - அமைதியும் சாந்தியும் உண்டாகி விடுகின்றன. 


இந்த அடிப்படையில் பார்க்கும்போது ஒரு முஸ்லிம் என்பவன் - இறைவனிடத்தில் சரணடைந்து விடுபவன். மேலும் அவன் அமைதியானவன்!


***


மனித இயல்புக்கேற்ற அந்த இயற்கைச் சட்டங்கள் குறித்து - சூரா ஆலு இம்ரான் சொல்வதென்ன? 


***


Article 3


முஸ்லிம்களின் ஆன்மிகம்!

==================

(இது தான் இஸ்லாம்! - பகுதி - 3)


படைத்த இறைவனுக்கும் - அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக வாக்குறுதி அளித்திருக்கின்ற  முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு எத்தகையது? 


சுருக்கமாக அதனை இங்கே விளக்குவோம். 


1 முஸ்லிம்கள் - இறைவனின் படைப்பினங்கள் குறித்து சிந்திப்பவர்களாக - ஃபிக்ர் - ( فكر - FIQR - CONTEMPLATION)


3:191 (பகுதி)

-------

வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்;


2 முஸ்லிம்கள் - இறை சிந்தனையில் ஈடுபடுபவர்களாக - ஃதிக்ர் - (ذكر - DHIKR - REMEMBRANCE OF GOD)


3:191 (பகுதி)

-------

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனைக் குறித்துச் குறித்துச் சிந்திக்கிறார்கள்!  


மேலும் பார்க்க - (3:135)



3 முஸ்லிம்கள் - இறைவனை நேசிப்பவர்களாக - (محبت - MUHABBAT - LOVE OF ALLAH) 


3:31 (பகுதி)

------

(நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்.


4 முஸ்லிம்கள் - பாவ மன்னிப்புத் தேடுபவர்களாக - (استغفار - ISTIGHFAR - ASKING FORGIVENESS) 


3:16 (பகுதி)

-----

எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” என்று கூறுவார்கள்.


மேலும் பார்க்க - (3:135)


5 முஸ்லிம்கள் - பொறுமையாளர்களாக (صابرين - SAABIREEN - BEING PATIENT) (3:17)


6 முஸ்லிம்கள் - உண்மையாளர்களாக (صادقين - SAADIQEEN - BEING TRUTHFUL) (3:17)


சூரா ஆலு இம்ரான் பொய்களை அள்ளி வீசுகின்ற நயவஞ்சகர்களைக் கடுமையாகச் சாடுகின்ற அத்தியாயம் ஆகும்.  


7 முஸ்லிம்கள் - பணிவுடன் கீழ்ப்படிபவர்களாக (قانتين - QAANITEEN - PIETY WITH HUMILITY)  (3:17)


8 முஸ்லிம்கள் - இறைவழியில் செலவழிப்பவர்களாக (منفيق - MUNFIQEEN - SPENDING) (3:17)


3:17

===

 இவர்கள் பொறுமையாளர்களாகவும், உண்மையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும் மற்றும் (இறைவழியில் தாராளமாகச்) செலவழிப்பவர்களாகவும் இருப்பதுடன் பின்னிரவு நேரங்களில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பிற்காக இறைஞ்சுபவர்களாகவும் இருக்கிறார்கள்.


***


9 முஸ்லிம்கள் - அதிகாலை நேரத்தில் தொழுது துஆ கேட்பவர்களாக (قيامل ليل - PERFROMING PRE DAWN PRAYERS) 


3:17

-----

அவர்கள் வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பிற்காக இறைஞ்சுபவர்களாகவும் இருக்கிறார்கள்.


***


10 முஸ்லிம்கள் - இறைவன் மீது நம்பிக்கை வைப்பவர்களாக (توكل - TAWAKKUL - TRUST IN ALLAH)


3:160

--------

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர்கள் ஒருவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை வைக்கவும்.


11 முஸ்லிம்கள் - இறைவனின் திருப்பொருத்தத்தை நாடுபவர்களாக (رضوان  - RILWAAN - SEEKING THE PLEASURE OF ALLAH)


3:174

--------

ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பேரருளையும் பெற்றுத்திரும்பினார்கள், அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை, இன்னும் அவர்கள், அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பின்பற்றிச் சென்றார்கள், அல்லாஹ்வோ மகத்தான பேரருளுடையோன்.



12 முஸ்லிம்கள் - உளத்தூய்மை மிக்கவர்களாக (تزكية - TAZKIYA - BEING PURIFIED)


3:164 (பகுதி)

-------

அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கின்றான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார். 


13 முஸ்லிம்கள் - இறைவனுக்கு நன்றியுடையவர்களாக ( شكر  - BEING GRATITUDE TO ALLAH) 


3:144 (பகுதி)

-------

ஆயினும், நன்றி செலுத்தி வாழ்பவர்க்கு அல்லாஹ் மிக விரைவில் அதற்குரிய கூலியை வழங்குவான்.


14 முஸ்லிம்கள் - இறைவனுக்கே உரித்தான நல்லடியார்களாக - (ربانيين - RABBAANIYYEEN - BECOME MEN OF GOD) 


3:79 (பகுதி)

------

“நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்”. 


The term "Rabbani" refers to "one who devotes himself exclusively to the endeavour to know the Sustainer (ar-rabb) and to obey Him". (Muhammad Asad)  


***


எப்படிப்பட்ட ஆன்மிகத்தை இறைவன் இந்த அத்தியாயத்தின் மூலம்  முஸ்லிம்களாகிய நம்மிடம் எதிர்பார்க்கிறான் என்பதைக் கவனித்தீர்களா? 


சூரா ஆலு இம்ரான் மதினாவில் குறிப்பாக உஹத் யுத்த சமயத்தில் வைத்து இறக்கியருளப்பட்ட அத்தியாயம் என்பதைப் பார்த்தோம். 


இன்றைய சூழலை நாம் கவனத்தில் கொண்டால் - நமக்கு இன்றைய தேவை இப்படிப்பட்ட ஆன்மிகம் தான்!


***

இன்ஷா அல்லாஹ் - தொடர்வோம்... 

Comments