ஒரு மீன் கெட்டுப் போவது என்பது அதன் தலையிலிருந்து தான்!



பாரசீக மன்னன் ஒருவன். தன் படை பட்டாளங்களுடன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றானாம். காட்டிலேயே சமைத்துச் சாப்பிடத் திட்டம். ஆனால் - சமையலுக்குத் தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்ட அரசவையின் சமையல்காரர்கள் - உப்பை மட்டும் மறந்து விட்டார்களாம். 


"பரவாயில்லை. காட்டுக்கு  அருகில் உள்ள கிராம மக்களிடம் வாங்கிக் கொள்ளலாம்!" என்று ஒரு சிலரை அனுப்பி வைத்தானாம் மன்னன். 


"எந்த அளவு உப்பை வாங்குகிறீர்களோ அதற்குரிய விலையை அம்மக்களிடம் கொடுத்து விட்டுத்தான் வாங்கிட வேண்டும்" - என்று உத்தரவிட்டானாம் மன்னன்.  

 

"ஏன் மன்னா? கொஞ்சம் உப்பைத் தம் மன்னனுக்கு இலவசமாகக் கொடுத்து விடுவதால் அவர்களுக்கு என்ன குறைந்து விடப் போகிறது?" - என்றார்களாம், மன்னனைச் சுற்றியிருந்த அமைச்சர்களில் சிலர். 


மன்னன் பதில் சொன்னானாம்: "எந்த ஒரு அநியாயமும் - அது துவங்கும்போது மிகச் சிறிய அளவில் தான் துவங்கும். ஆனால் அதுவே பின்னர் மிகப் பெரிய அநியாயமாக உருவெடுத்து நிற்கும்." 


"மன்னன் - தனது குடிமகன் ஒருவனின் தோட்டத்தில் ஒரே ஒரு ஆப்பிள் பழத்தை இலவசமாக எடுத்துக் கொண்டால், மன்னனின் ஊழியர்கள் அந்தத் தோட்டத்திலுள்ள ஆப்பிள் மரங்கள் அனைத்தையும் வேரோடு பிடுங்கிச் சென்று விடுவார்கள்!"  


"மன்னன் - தனது குடிமகன் ஒருவனின் கோழிப்பண்ணையில் ஒரு ஐந்து முட்டைகளை மட்டும் இலவசமாக எடுத்துக் கொண்டு விட்டால் - மன்னனின் ஊழியர்கள் - ஆயிரம் கோழிகளைக் காணாமல் அடித்து விடுவார்கள்" என்றானாம் அந்த நீதி தவறாத மன்னன்.  


***


நேற்று முக நூலில் ஒருவர் எழுதியிருந்தார் ஆங்கிலத்தில். 


"நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் - பொது மக்களில் பலர் - வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுகிறார்கள். இப்படிப்பட்ட குற்றவாளிகளாக (criminals) மக்கள் இருந்தால் - இவர்களை விட பெரிய குற்றவாளிகள் தாம் இவர்களை ஆட்சி செய்வதற்குத் தகுதியானவர்கள்!" 


இந்தக் கருத்து முற்றிலும் தவறு என்பதைத் தான் நாம் மேலே சொன்ன கதை விளக்குகிறது!


கேள்விப்பட்டது தான். துருக்கிப் பழமொழி ஒன்று என்று  நினைக்கிறேன். 


"ஒரு மீன் கெட்டுப் போவது என்பது அதன் தலையிலிருந்து தான்!"

Comments