சூரா அந்நிஸா சிந்தனைகள்


பலவீனர்களை பலப்படுத்துதல்!


திருக்குர்ஆனின்  நான்காவது அத்தியாயமான - "அன்-னிஸா" - (பெண்மணிகள்) அத்தியாயத்தின் மையக் கருத்து:


"பலவீனர்களை பலப்படுத்துதல்"


"Empowering the disempowered"


- ஷெய்ஃக் காலித் அபூ அல் ஃபள்ல்


இன்றைய சூழ்நிலையில் - நாம் சிந்திப்பதற்கு நிறைய செய்திகள் இருக்கின்றன இந்த அத்தியாயத்தில்!


 Facebook / Feb 21, 2022 / பதிவு 1


@@@@@


Facebook / Feb 23, 2022 / பதிவு 2


சற்று அந்தச் சூழலை நினைத்துப் பாருங்கள்!


அந்நிஸா அத்தியாயம் இறக்கியருளப்பட்ட சூழலை அறிவது அவசியம். இந்த அத்தியாயம் -  ஹிஜ்ரி நான்காம் ஆண்டில் - மதினாவில் வைத்து இறக்கியருளப்பட்டது. அதாவது பத்ர் யுத்தம், உஹத் யுத்தம் ஆகிய இரண்டு முக்கியமான யுத்தங்களுக்குப் பின்னரே இந்த அத்தியாயம் இறக்கியருளப்பட்டிருக்கிறது.  


நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் - ஹிஜ்ரி இரண்டில் நடைபெற்ற பத்ர் யுத்தத்தில் ஒரு பதினான்கு நபித்தோழர்கள் ஷஹீத் ஆகி விட்டிருந்தார்கள். ஹிஜ்ரி மூன்றில் நடைபெற்ற உஹத் யுத்தத்திலும் ஒரு எழுபது நபித்தோழர்கள் ஷஹீத் ஆகியிருந்தார்கள். 


ஹிஜ்ரி நான்கு. மவுனா கிணறு சம்பவம் நடந்த ஆண்டு. ஒரு கூட்டத்தார் வேண்டிக் கொண்டதற்கிணங்க - அவர்களுக்குக் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்காக - ஒரு எழுபது நபித்தோழர்களை அனுப்பி வைத்தார்கள் நபியவர்கள். அண்ணலார் (ஸல்) அவர்களை ஏமாற்றி அந்த நபித் தோழர்களை அழைத்துச் சென்ற அந்த துரோகிகளால் - நபித்தோழர்கள் 69 பேரும் படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள்!


சற்று அந்தச் சூழலை நினைத்துப் பாருங்கள்: 


கணவனைப் பறி கொடுத்ததால் - ஒரு நூற்றுக்கு மேற்பட்ட விதவைகள் - அன்றைய சூழலில். இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான அனாதைக் குழந்தைகள்! 


இந்தக் குடும்பங்களின் நிலை இனி என்ன? சமூகத்தின் பலவீனர்கள் இப்போது அவர்கள் தாம்! இவர்களை பலப்படுத்த வேண்டாமா? 


சூரா அந்நிஸாவை இறக்கியருள்கிறான் எல்லாம் அறிந்த வல்லோன் அல்லாஹு தஆலா!


@@@@@


Article 3


ஒரே தாய்! ஒரே தந்தை!


அந்நிஸா அத்தியாயத்தின் முதல் இறை வசனமே மனிதகுல சமத்துவப் பிரகடனம் தான்!


4:1 (பகுதி)

----

மனிதர்களே, உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். 


இது இந்த அத்தியாயத்தின் முதலாவது வசனத்தின் ஒரு பகுதி மட்டுமே! இது இறைவனின் மகத்தானதொரு பிரகடனம் ஆகும்! மனித குலத் தோற்றத்தின் ஒருமைக்கும், அதன் அடிப்படையில் மனிதர்களுக்கிடையே அமைகின்ற சமத்துவத்துக்குமான பிரகடனம்!


Yes, it is a Divine Declaration of common origin of mankind and equality among all the human beings!


***

இந்த அத்தியாயத்தின் எந்த ஒரு பகுதியை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டாலும், இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற எந்த ஒரு சட்டத்தைப் புரிந்து கொள்ள முற்படும்போதும் - இந்த முதல் வசனத்தின் சமத்துவப் பிரகடனத்தை இணைத்துப் பார்க்க நாம் தவறி விடக்கூடாது. 


***


இரண்டு உதாரணங்கள்:  


ஒன்று:


4:2

----

நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.


இந்த கட்டளையை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் - "அநாதைகளின் சொத்துக்களை ஓர் எச்சரிக்கை உணர்வுடன் பராமரிப்பது பற்றிய விஷயத்தில்  அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அநாதைகளைப் பராமரிப்பவனும், பராமரிக்கப்படும் அந்த அநாதைகளும், ஒரே தாய் தந்தையரின் வழித்தோன்றல்கள் என்பதை மறந்து விடாதீர்கள்!" - இப்படித்தான் இறை உணர்வோடு சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்! 


இரண்டு: 


4:3 (பகுதி)

----

அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்;


இந்த கட்டளையை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் - "அநாதைப் பெண்களின் திருமண விஷயத்தில் - அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அநாதைப் பெண்களுக்கு நீதி செலுத்துங்கள். அந்த அநாதைப் பெண்களும் அவர்களைத் திருமணம் செய்து கொள்பவர்களும் ஒரே தாய் தந்தையரின் வழித்தோன்றல்கள் என்பதை மறந்து விடாதீர்கள்!" - என்பதாகத்தான் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்! 


சூரத்துன் நிஸாவின் மிக முக்கியமான படிப்பினையே இது தான்!


"பலவீனமானவர்கள் விஷயத்தில் - அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்களும், அந்த பலவீனமானவர்களும் ஒரே தாய் தந்தையரின் வழித்தோன்றல்கள் என்பதை மறந்து விடாதீர்கள்!" - என்பது தான்!


Article 4 / FB / on 28-02 - 2022

மனிதன் பலவீனமானவன்!  


பலவீனர்களைப் பலப்படுத்துவது என்பது இஸ்லாமிய சட்டங்களின் மிக முக்கியமான நோக்கங்களுள் ஒன்று! 


பின் வரும் இரண்டு இறை மறை வசனங்களையும் படியுங்கள்: 


4:27

------

மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.


4:28

------

அன்றி, அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகிறான். ஏனெனில் மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.


***


திருமறையிலே மனிதனின் மனோ இச்சையைக் குறித்திட இரண்டு சொற்களைப் பயன்படுத்துகிறான் இறைவன். 


1 ஹவா


2 ஷஹவாத் 


***


மேற்கண்ட இறை வசனம் ஒன்றில் ஷஹவாத் (شهواث) எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஷஹவாத் எனும் இச்சை மனிதனின் உலக இன்பங்கள் சார்ந்த இச்சைகளாகும்! இந்த இச்சைகள் கட்டுப்படுத்தப்பட்டாக வேண்டும். இல்லையெனில் - அவன் பாவங்களில் வீழ்ந்து விடுவான்!  அவன் மனிதத் தன்மையை இழந்த மிருகமாக மாறி விடுவான்! எனவே மனிதனின் ஷஹவாத் எனும் உலக இன்பங்கள் சார்ந்த இச்சைகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கே - இறைவன் தன் சட்டங்களைக் கொண்டு வழிகாட்டுகிறான். அதுவும் மிக இலகுவான சட்டங்கள் என்று இறைவனே சுட்டிக் காட்டுகிறான். 


இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் - இந்த இலகுவான வழிகாட்டுதலை மனிதன் புறக்கணிக்கும்போது - அவன் தன் மேல் தேவையில்லாத பாரத்தைச் சுமக்க வேண்டியவனாக ஆகி விடுகின்றான்; ஏனெனில் மனிதன் பலவீனனாக படைக்கப்பட்டிருக்கிறான் - என்று விளக்கம் தருகின்றான் இறைவன்!    


இதையே இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால் - மனிதனுக்கு இலகுவான சட்டங்களை இறைவன் வகுத்திருப்பதற்குக் காரணமே - பலவீனமான மனிதனைப் பலப்படுத்துவதற்குத் தான்! அதாவது - பலவீனனான மனிதனைப் பலப்படுத்துவது என்பது இஸ்லாமிய சட்டங்களின் மிக முக்கியமான நோக்கங்களுள் ஒன்று என்றால் அது மிகையாகாது! 


இந்த அடிப்படைக் கருத்தை மனதில் வைத்தே - சூரா அந் நிஸாவில் வருகின்ற அத்தனை மார்க்க சட்டங்களையும் நாம் அணுகிட வேண்டும். நோக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சட்டங்களை மட்டும் "விடாமல்" பிடித்துக் கொண்டால் - தவறான புரிதல் ஏற்பட்டு விடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது!


#ஷரீஅத்


@@@


Article 5 / FB / on March 1, 2022

பலப்படுத்துதல் - மூன்று வழிகளில்.....


பலவீனமானவர்களை பலப்படுத்திட - இறைவன் - இந்த அத்தியாயத்தில் - மூன்று வழிமுறைகளக் கையாளுகின்றான்: அவை:  


உறவுகள் மூலம்! உரிமைகள் மூலம்! உதவிகள் மூலம்!



1) உறவுகள் மூலம்!

-------------------------


அநாதைப் பெண்களும், வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட அடிமைப் பெண்களும் இருந்த சூழல் தான்  அன்றைய மதீனத்துச் சூழல் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டிருந்தோம்.  


அப்படிப்பட்ட அநாதைப் பெண்களுக்கும், வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட அடிமைப் பெண்களுக்கும்  "திருமண உறவுகளை" ஏற்படுத்தித் தருவதன் மூலம் - அவர்களுக்கு சமூக அங்கீகாரம் ஒன்றைக் கிடைக்க வழி வகை செய்து தந்து விடுகிறான் இறைவன்! 


அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். (4:3)


ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; (4:3)


அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும். (4:3)



2) பொருளாதார உரிமைகள் மூலம்!

-------------------------------------------


அடுத்து - பொருளாதாரத்தில் பலவீனர்களுடைய பங்கை உறுதி செய்வதன் மூலமும், அவர்களுடைய பொருளாதார உரிமைகளில் யாரும் கை வைத்திடாத வண்ணம் - தடுத்து விடுவதன் மூலமும்  அவர்களுடைய பொருளாதார நிலையை உயர்த்தி விடுகிறான் இறைவன்.   


அநாதைகளுக்கு அவர்களுடைய உடைமைகளைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! (4:2) 


நல்ல பொருளுக்குப் பதிலாக தீய பொருளை மாற்றாதீர்கள்; (4:2) 


மேலும், அவர்களின் பொருள்களை உங்களின் பொருள்களோடு கலந்து உண்ணாதீர்கள்; திண்ணமாக இது பெரும் பாவமாகும். (4:2) 


மேலும், அநாதைகளை அவர்கள் திருமணப் பருவத்தை அடையும் வரை சோதித்து வாருங்கள்! (4:6)


அவர்களிடம் (பகுத்துணரும்) தகுதியை நீங்கள் கண்டால், அவர்களுக்குரிய உடைமைகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுங்கள். (4:6)


அவர்கள் பெரியவர்களாகி(த் தங்களின் உரிமைகளைக் கேட்டு)விடுவார்களென அஞ்சி அந்த உடைமைகளை நீதிக்குப் புறம்பாக, வீண் விரயமாக, அவசரமாக விழுங்கி விடாதீர்கள்! (4:6)


அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வந்தராக இருந்தால், அவர் அநாதைகளின் சொத்துக்களிலிருந்து உண்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். (4:6)


அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவோடு உண்ணலாம். (4:6)


அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அதற்குச் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் கணக்கு கேட்பதற்கு அல்லாஹ் போதுமானவன்.(4:6)


நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள். (4:4) 


(மரணமடைந்த) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்குண்டு. (4:7)


(அது போல) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு; (4:7)


நீங்கள் ஒரு மனைவிக்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள். (4:20)


3) பொருளாதார உதவிகள் மூலம்!

----------------------------------------


மூன்றாவது - மிகவும் பலவீனமான மக்களைப் பொறுத்தவரை -  இறையச்சத்தின் அடிப்படையில் அந்த பலவீனமான மக்களுடைய உணர்வுகளையும், தேவைகளையும் கவனத்தில் கொண்டு - அவர்களுக்குப் பொருளாதார வசதிகளைச் செய்து தர வேண்டும்  என்ற அற விழுமிய இறை வசனங்களைக்  கொண்டு வழிகாட்டுகிறான் இறைவன்!


பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்; (4:8)


மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். (4:8)


மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், பக்கத்திலிருக்கும் நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; (4:36)


***


விரிவஞ்சி ஒரு சில இறைவசனங்களை மட்டுமே - இங்கே பகிர்ந்திருக்கிறோம். மேலும் இதே அத்தியாயத்தை நீங்களும் படித்துப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 


ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், அடிமைகளுக்கும், இன்ன பிற பலவீனமானவர்களுக்கும் - எப்படிப்பட்ட - சமூகவியல் சட்டங்களை - அதுவும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரேயே - இறக்கியருளியிருக்கிறான் என்று சிந்தித்துணர்ந்து நன்றி செலுத்துவோம் வல்ல இறைவனுக்கு!


@@@


Facebook on 2022

"வேரென நீயிருந்தாய்!

அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்!" 


#இல்லறம்


@@@

Facebook on 2022

ஒரு சமூகத்தில் - 

திருமண உறவுகள் பலவீனம் அடைவது என்பது - 

அந்த சமூகத்தின் பலவீனத்தையே சுட்டிக் காட்டுகிறது! 


#திருமணம் #இல்லறம் #கணவன்_மனைவி


@@@ 

Facebook on 2022

ஜுலைபீப்! 

========


ஜுலைபீப் (ரளி) அவர்கள்! இவர் ஒரு முன்னாள் அடிமை! மிக மிகக் குள்ளமானவர் (dwarf). முகத்தில் எந்த ஒரு அழகையும் பெற்றிடாதவர். யாரும் இவரை விரும்புவதில்லை. எந்த ஒரு சமூக நிகழ்ச்சிக்கும் இவரை அழைப்பாரில்லை. இவர் வந்து விட்டாலோ – முகம் சுளிப்பு. எனவே அவரும் ஒதுங்கிக் கொண்டார் – கூண்டிலடைபட்டவரைப் போல்.


அண்ணலார் (ஸல்) அவர்கள் - இவரை எப்படி உயர்த்திக் காட்டினார்கள் தெரியுமா? மதினாவிலேயே மிகச் சிறந்த ஒரு பெண்ணை அவருக்கு மணமுடித்துத் தருகின்றார்கள். 


அதன் பிறகு இவர் எந்த அளவுக்கு உயர்ந்தார் தெரியுமா? அடைபட்டுக் கிடந்த ஜுலைபீப் போர்க்களம் செல்கிறார். வீர சாகசங்கள் புரிகிறார்! எதிரிகளில் எழுவரைக் கொன்று விட்டு உயிர்த்தியாகியாக மரணிக்கின்றார்! 


இது தான் திருமணம் தரும் பலம்!


#திருமணம்


@@@

Facebook on 1-3-2022


பாத்திமா பின்த் கைஸ் (ரளி) அவர்களை அவர்களது கணவர் விவாகரத்துச் செய்து விட்டார். இத்தா முடிந்ததும் இரண்டு நபித் தோழர்கள் அவரை மணம் முடிக்க விரும்பினார்கள். இந்நிகழ்ச்சியை அவர் பின் வருமாறு விவரிக்கிறார்.


நான் "இத்தா'வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "முஆவியா பின் அபீசுஃப்யான் (ரளி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரளி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்'' என்று சொன்னேன்.


அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியா ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்,'' என்று கூறினார்கள்.


நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உசாமாவை மணந்து கொள்'' என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன். 


அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரளி); (நூல்: முஸ்லிம்)


#திருமணம்


@@@

FB on March 1, 2022

இன்னும் மாறவில்லை!


அன்று.... 


யார் மூலமோ கேள்விப்பட்டு - தம் மகனுக்குப் பெண் பார்ப்பதற்காக வெளியூர் ஒன்றிலிருந்து எங்கள் ஊருக்கு ஒரு சிலர் வந்திருந்தார்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு! எம் வீட்டிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் எங்கள் குடும்பத்தைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். அவர்கள். 


விவரங்களைத் தெரிந்து கொண்டதும் - "பெண்ணுக்குத் தந்தை இல்லை என்கிறீர்கள். அண்ணன்மார்களோ "பயணம்" எங்கேயும் செல்லவில்லை என்கிறீர்கள். உள்ளூரில் சம்பாதிப்பவர்கள் தங்கைக்கு என்ன செய்து விட முடியும்?" - என்று சொல்லி விட்டு எங்கள் வீட்டுக்கு வராமலேயே சென்று விட்டார்களாம்!  


இன்று....


என் தங்கை மகள் வந்திருந்தார். தன் தங்கையைப்பெண் பார்க்க ஒரு குடும்பத்தினர் வந்திருந்தார்களாம். வீட்டுக்குள் நுழைந்ததுமே - "எத்தனை பவுன் பெண்ணுக்குப் போடுவீர்கள்?" என்று கேட்டார்களாம் - பெண்ணைக் கூடப் பார்க்காமல்! "நகையைப் பற்றிப் பேசினால் - பெண் தர மாட்டோம்!" - என்று அனுப்பி வைத்து விட்டாராம் என் தங்கையின் குடும்பத்தினர்.  


இன்னும் மாறவில்லை!


Facebook / 2-3-2022


ஊர் தோறும் இருக்கின்ற 

திருமணமாகாத ஏழைக்குமர்கள் விஷயத்தை  


நாம் கண்டும் காணாதது போல் 

தொடர்ந்து அலட்சியப் படுத்திக் கொண்டே இருந்தால்  


நம் சமூகத்தை வேறு எந்த வகையிலும் 

பலப்படுத்திடவே முடியாது!  


நமக்குத் தலைக்கு மேலே 

வேறு எவ்வளவு பிரச்னைகள் 

சூழ்ந்திருந்தாலும் சரியே!


ஏழைக் குமர்களுக்குத் 

திருமண ஏற்பாடுகள் செய்து தர வேண்டியது 

நம் சமூகத்தின் தவிர்க்க இயலாத கடமை!


இதற்கும் அண்ணல் நபி (ஸல்) அவர்களே 

நமக்கு முன்மாதிரி!


மூத்த தலைமுறை ஓய்ந்து விட்டது!

இளைய தலைமுறை தான் முன்வர வேண்டும்!


புதிய புதிய உத்திகளுடன் 

முன் வாருங்கள்!


அல்லாஹ்வின் உதவி 

உங்களுக்கு எப்போதும் உண்டு!


#பலவீனர்களை_பலப்படுத்துதல்


@@@


Facebook / 02- 3- 2022


அநாதை இல்லங்கள்!


அநாதைகளைப் பராமரிப்பதைப் பொறுத்தவரை - சூரா அந்நிஸாவை நாம் ஆய்வு செய்து பார்த்திடும்போது - அந்த அநாதைகள் ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி, அல்லது பெண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி - அவர்கள் - "நமது குடும்ப அமைப்புக்குள்" வைத்தே பராமரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.   


அநாதை இல்லங்கள் - என்ற ஒரு நிறுவன அமைப்பு என்பது இஸ்லாமிய நாகரிகம் அறியாத ஒன்றாகும்!

இஸ்லாமிய நாகரிகம் கோலோச்சிய கால கட்டங்கள் முழுவதிலும் - அநாதை இல்லங்கள் - என்ற ஒரு நிறுவன அமைப்பை நாம் காணவே இயலாது. 


அநாதைச் சிறுவர்களையும், அநாதைச் சிறுமிகளையும் - நம் குடும்ப அமைப்பில் வைத்து வளர்த்து ஆளாக்கி, அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கும், அவர்களை அநாதை இல்லங்களில் வைத்துப் பராமரித்து வளர்ப்பதற்கும், மிகப்பெரிய வேறுபாடு உண்டு! 


அநாதை இல்லங்களில் வைத்து அவர்கள் பராமரிக்கப்படும்போது - உளவியல் ரீதியாக - தாங்களும் நம் சமூகத்தின் அங்கம் தான் என்ற "கண்ணியத்துக்கு பதிலாக" - தாம் தம் சமூகத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டவர்கள் என்ற " தாழ்வு மனப்பான்மை" உடையவர்களாக அவர்கள் வளர்ந்து ஆளாவார்கள்! இந்த உளவியல் சிக்கல் - அவர்களின் எதிர்கால  வாழ்வு முழுவதும் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும்.  


அநாதை இல்லங்கள் என்பது காலனித்துவத்தின் கண்டுபிடிப்பு என்கிறார் ஓர் இஸ்லாமிய அறிஞர்!

திருக்குர்ஆனின் வழிகாட்டுதலில் இருந்து நாம் எவ்வளவு தூரம் விலகி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்?   


Comment: 

குடும்பத்திற்குள் சேர்த்து வளர்க்கும்போது, மஹரம் தொடர்பான குழப்பங்கள் வருகின்றதே... அதற்கென்ன தீர்வு


Reply: 

எனக்குப் பட்டதை மட்டும் சொல்கிறேன். குடும்பத்தில் ஆண்களுக்கான பகுதியும் பெண்களுக்கான பகுதியும் வரையறுக்கப் பட்டு விட்டால் இந்தப் பிரச்னை வராது என்று நினைக்கிறேன். நமது உறவினர்களில் அல்லது நண்பர்களில் யாராவது நம் வீட்டுக்கு வந்து விட்டால் அவர்களைத் தங்க வைத்து உபசரித்து அனுப்புகிறோம் தானே? 


வேறு ஆலோசனைகள் இருந்தால் நண்பர்கள் சொல்லட்டுமே!

**

ஒரு சில தம்பதியர்க்கு குழந்தைகளே இல்லை என்று வரும்போது - அநாதைச் சிறுவர்களை மட்டுமோ / அல்லது அநாதைச் சிறுமிகளை மட்டுமோ வைத்து வளர்க்கலாம். 


ஒரு சில பெற்றோர்களுக்கு ஆண் குழந்தைகள் மட்டுமே என்று இருந்தால் அவர்களும் அ நாதைச் சிறுவர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு வளர்க்கலாம். 


அது போலவே - பெண் குழந்தைகளை மட்டும் பெற்றிருப்பவர்கள் - அநாதைச் சிறுமிகளை மட்டும் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம். 


பருவம் அடைந்த ஆண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில், பருவம் அடைந்த அநாதைச் சிறுமியை வளர்ப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம். 


அல்லது - பருவம் அடையாத அநாதைச் சிறுவர் சிறுமிகளை நம் வீடுகளிலேயே  வளர்த்து அவர்கள் பருவம் எய்தியதும் - மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்து கொள்ளலாம். 


@@@


குடும்ப நல சீர்திருத்த சங்கங்கள்!


இளம் கணவன் மனைவியருக்கிடையே கருத்து வேறுபாடுகளும், இல்லறச் சிக்கல்களும் தோன்றி விட்டால் - அதனை அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக் கொள்தல் மிகவும் கடினம்.  


கருத்து வேறுபாடுகள் எதற்காகவெல்லாம் ஏற்படும்?


ஒன்றுமில்லாத சிறு விஷயத்திலும் ஏற்படலாம். பெரிய விஷயங்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.


விவரம் அறியாத அந்த இளம் கணவனும் மனைவியும் செய்வதறியாது தவிப்பார்கள். பிரச்னைகளை வெளியில் சொல்ல மாட்டார்கள். “எல்லாம் தானாகவே சரியாகி விடும்” என்று நினைப்பார்கள். ஆனால் சரியாகாது!


யாரிடமாவது சொல்லலாமா என்று எண்ணுவார்கள்.


பெரும்பாலான கணவன்மார்கள் யாரிடமும் போய் தங்களின் பிரச்சனைக்கு தீர்வு கேட்க மாட்டார்கள். வெகு சிலர் தங்களின் (சற்று விபரமுள்ள) தந்தையிடம் போய் பேசுவார்கள். இன்னும் சிலர் மார்க்க அறிஞர்களின் உதவியை நாடுவார்கள்.


மனைவிமார்கள் தங்கள் தாயிடமோ, சகோதரியிடமோ போய் அடைக்கலம் தேடுவார்கள்.


பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் – அல்ஹம்து லில்லாஹ்! ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பிரச்னைகள் தீர்வதில்லை!


இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கணவன் மனைவியர் எவ்வாறு இல்லறத்தை வழிநடத்துகிறார்கள்?


ஒன்று: ஒருவர் மீது ஒருவர் கோபத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள். (emotional outburst)


அல்லது: கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள். (resentment)


அல்லது: ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள் (blaming). இது அனுதினமும் தொடர்கிறது.


அல்லது: “மவுனமே” சிறந்தது என்று வாயைப் பொத்திக் கொண்டு (stone walling) “தேமே” என்று வாழ்ந்து விட்டுப் போய் விடலாம் என்று முடிவு கட்டி விடுகின்றார்கள்.


ஆனால் இவை அனைத்துமே தீர்வுகள் அல்ல! இது அவர்களுக்குத் தெரிவதும் இல்லை!


***


பிரச்னை சற்று அல்ல, உண்மையிலேயே பெரியது,  அல்லது பூதாகாரமானது என்று வைத்துக் கொள்ளுங்கள். சான்றாக - கணவனோ அல்லது மனைவியோ - தங்களின் வாழ்க்கைத் துணை தனக்கு "உண்மையாக" நடந்து கொள்ளவில்லை என்று சந்தேகப்படுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அல்லது தமக்கு துரோகம் இழைப்பதாக எண்ணுவதற்கு வாய்ப்பிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். 


இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாகி விட்டபிறகு - தங்களின் இல்லற சிக்கல்களை எவ்வாறு அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக் கொள்ள இயலும்? 


***


கணவன் மனைவியருக்குள்ளே எற்படுகின்ற பிரச்னைகளுக்கும் பிணக்குகளுக்கும் தீர்வாக - திருக்குர்ஆன் கூறும் வழிகாட்டுதல்களுள் ஒன்று தான் இரு தரப்பிலும் ஆளுக்கொரு நடுவரை ஏற்படுத்திக் கொண்டு பிரச்னையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வதாகும்.  


4:35

-----

மேலும், கணவன், மனைவிக்கிடையே உறவு முறியுமோ என நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும், மனைவியரின் உறவினரிலிருந்து மற்றொரு நடுவரையும் நியமியுங்கள். அவ்விருவரும் உறவைச் சீர்படுத்த நாடினால், அல்லாஹ்வும் அவ்விருவருக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான். திண்ணமாக, அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான். 


***


இந்த இறை வசனத்தின் வழிகாட்டுதலுக்கு எவ்வாறு செயல் வடிவம் தருவது?  இதனை இப்படிச் சிந்தித்துப் பார்ப்போம். 


ஒரு முஹல்லா அல்லது ஒரு ஜமாஅத். இதுவே நமது கூட்டமைப்பு. இப்படிப்பட்டஒவ்வொரு முஹல்லாவிலும் - திருமஂண விவகாரங்களைத் தீர்க்கும் விவரம் அறிந்த  நடுவர்களைக் கொண்ட குடும்பநல சீர்திருத்த அமைப்பு ஒன்று  உருவாக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். 


இப்படிப்பட்ட நடுவர்களுக்கான தகுதி: மார்க்க அறிவு மற்றும் திருமண உளவள ஆலோசனை பற்றிய அறிவு -  ஆகிய இரண்டும் தான்!


இப்படிப்பட்ட நிறுவன அமைப்பு ஒன்று - திறம்பட செயல்பட்டால் நம் சமூகத்தில் நிகழ்கின்ற பெரும்பாலான விவாக விலக்குகளை நாம் தவிர்த்திட இயலும்.   


இலங்கையைச் சேர்ந்த உஸ்தாத் முஹம்மது மன்சூர் அவர்கள் - செய்தி ஒன்றைச் சொல்கிறார்கள். ஷஹீத் ஷெய்ஃக் அஹ்மத் யாசீன் அவர்கள் பாலஸ்தீனில் சங்கம் ஒன்றை நிறுவினார்களாம். அதன் பெயர் - லஜ்னத்துல் முஸாலஹா - என்பதாகும். சீர்திருத்தச் சங்கம் என்று மொழிபெயர்க்கலாம். குறிப்பாக - கணவன் மனைவையருக்கிடையே ஏற்படுகின்ற இல்லறச் சிக்கல்களைத் தீர்ந்து வைப்பதே இந்தச் சங்கம் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். இதன் விளைவாக - பாலஸ்தீனில் - விவாக விலக்குகள் மிகவும் குறைந்து  போய் விட்டதாம்.  


இன்றைய தேவை இப்படிப்பட்ட குடும்ப நல சீர்திருத்த சங்கங்கள் தாம். 


ஆனால் இன்றைய நமது நிலை என்ன?  நம் சமூகத்தின் இன்றைய இளம் கணவன் மனைவியர் பெரும்பாலோருக்கு திருமணம் மற்றும் விவாக விலக்கு சம்பந்தப்பட்ட மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் தெரியவே தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். 


தலாக்கைத் தவிர்ப்பது என்பது எப்படி என்று தெரியாது! தலாக் விடுவது எப்படி என்றும் தெரியாது! தலாக்குக்குப் பிறகு எப்படி நடந்து கொள்வது எப்படி என்பதும் தெரியாது! 


இந்த நிலையில் சமூகத்தை வைத்துக் கொண்டிருக்கும்போது  - சமூகம் மேலும் மேலும் பலவீனப்பட்டுக் கொண்டே போவதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது!


சமுதாயம் சிந்திக்கட்டும்!


@@@


பலவீனர்களின் உரிமை விஷயத்தில்... 

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப் படுங்கள்!


சூரா அந்நிஸா நெடுகிலும் - அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப் படிய வேண்டியதன் அவசியம் குறித்த இறை வசனங்கள் திரும்பவும் திரும்பவும் இடம்பெற்றிருப்பதை நாம் காணலாம். 


4:13

-----

இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் அவன் நுழையவைப்பான். அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.


4:59

-----

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.


4:69

-----

எவர்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிகின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள்புரிந்துள்ள நபிமார்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர்கள் மற்றும் உத்தமர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள்!



***


இதற்கு முன்னர் நாம் எழுதிய ஒரு சில பதிவுகளில் - சூரா அந்நிஸாவில் - அநாதைகளின் வளர்ப்பு குறித்தும், அவர்களுடைய சொத்து பராமரிப்பு குறித்தும்,  அநாதைப் பெண்களின் திருமணம் குறித்தும், பெண்களின் சொத்துரிமை குறித்தும்  - பல விரிவான வழிகாட்டுதல்களையும், நுட்பமான இறைச் சட்டங்களையும், பல அரிய அற விழுமியங்களையும் - இறக்கியருளியிருக்கிறான் இறைவன் என்பதைப் பார்த்தோம் அல்லவா?  


***


நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருப்போம். அல்லாஹ்வின் கட்டளைகள் இறக்கியருளப்பட்ட உடனேயே - நபித் தோழர்கள் "அனைவரும்" - அந்த இறைக் கட்டளைகளுக்கு அப்படியே செயல் வடிவம் கொடுத்திருப்பார்கள் என்று! ஆனால் அது அப்படியாக இருந்திடவில்லை! 



சூரா அந்நிஸா இறக்கியருளப்பட்ட கால கட்டம் ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ஆகும்! ஒரு மிகப் பெரிய சமூக மாற்றத்துக்கு - அல்லாஹு தஆலா - முஸ்லிம்களைத் தயார் படுத்தத் தொடங்கிய கால கட்டம் ஆகும் அது!


சூரா அந்நிஸா இறக்கியருளப்படுவதற்கு முன்னர் - அந்த மக்களிடையே இருந்த பழக்க வழக்கங்களை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடுகின்ற சட்டங்கள் தான் சூரா அந்நிஸாவின் சட்டங்கள்.  


அன்றிருந்த அறியாமைக் கால பழக்க வழக்கங்கள் என்னென்ன? 


அநாதைகளின் சொத்துக்களைத் தனியே எடுதது வைத்துக் கணக்குப் பார்த்து - அவர்கள் வயதுக்கு வந்த பின்னர் அவர்களிடம் திருப்பி ஒப்படைப்பது என்பது எல்லாம் அவர்கள் கேள்விப்பட்டிராத விஷயம்! தங்கள் சொத்துக்களோடு கலந்து - செலவு செய்து விடுவார்கள். எதுவும் அவர்களுக்குத் திரும்பித் தர மாட்டார்கள். சூரா அந்நிஸா அதற்கு முற்றுப் புள்ளி வைத்தது!


அநாதைப்பெண்கள் விஷயத்திலும் அந்தப்பெண்களுக்கென்று எந்த உரிமையும் இல்லாத பழக்க வழக்கங்கள். அதற்கும் ஒரு முற்றுப் புள்ளி! சொத்துரிமையில் பெண்களுக்குப் பங்கா? ஆம்! கொடுத்தே ஆக வேண்டும் என்றது சூரா அந்நிஸா!


இப்படிப்பட்ட உறுதியான இறைக் கட்டளைகளுக்குக் கட்டுப்படத் தயங்கியவர்களை நோக்கித் தான் - அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் - கட்டுப்பட்டு நடக்க வேண்டியதன் அவசியத்தைத் திரும்பவும் திரும்பவும் வலியுறுத்திக் கொண்டே வருகிறது சூரா அந்நிஸா. 


4:14

-----

மேலும், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிய மறுத்து அவனுடைய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்களை அல்லாஹ் நரகத்தில் தள்ளுவான்! அதில் அவர்கள் நிலையாக விழுந்து கிடப்பார்கள். அவர்களுக்கு (அங்கு) இழிவுபடுத்தும் தண்டனையும் இருக்கிறது.


4:64

------

அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.


4:65

------

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்


***


பலவீனர்களின் உரிமைகளை - நிலை நாட்டிடுவதற்காக - அழுத்தமான ஒரு சமூக சீர்திருத்தத்தை முன் வைத்து - நபியவர்கள் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்தக்கால கட்டத்தில் - அதற்கு முற்றிலும் கட்டுப்பட மறுப்பதை - "நயவஞ்சகத் தனம்" - என்று சுட்டிக் காட்டுகிறான் இறைவன்! 


4:61

------

மேலும், ‘அல்லாஹ் இறக்கிவைத்த (சட்டத்)தின் பக்கமும், தூதரின் பக்கமும் வாருங்கள்’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வராமல் விலகிச் செல்வதையே நீர் பார்க்கின்றீர்.


4:80

------

யார், அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்ப்படிகின்றாரோ அவர் உண்மையில் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவராவார். மேலும் யாரேனும் புறக்கணித்துவிட்டால், அவர்களின் பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை.


4:81

-----

(நபியே! உங்களுக்கு நாங்கள்) கீழ்படிகிறோம் என்று அவர்கள் (வாயளவில்) கூறுகின்றனர்;; உம்மை விட்டு அவர் வெளியேறிவிட்டாலோ, அவர்களில் ஒரு சாரார், நீர் (அவர்களுக்குக்) கூறியதற்கு மாறாக இரவு முழுவதும் சதியாலோசனை செய்கின்றனர்; அவர்கள் இரவில் செய்த சதியாலோசனையை அல்லாஹ் பதிவு செய்கிறான்; ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக - பொறுப்பேற்பதில் அல்லாஹ்வே போதுமானவன்


அப்படிப்பட்ட நயவஞ்சகர்களிடம் நபியவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? 


4:63

-----

இத்தகையவர்களின் இதயங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். எனவே, நீர் அவர்களின் நடத்தையைப் புறக்கணித்து விடுவீராக! அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக! மேலும் அவர்களின் உள்ளங்களில் பதியக்கூடிய நல்லுரையை நீர் அவர்களுக்குக் கூறுவீராக!


***


ஒரே ஒரு கேள்வி மட்டும்!


அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று வருகின்ற இறை வசனங்களை - அவை இறக்கியருளப்பட்ட சூழ்நிலைகளில் இருந்து பிரித்தெடுத்து - நாம் எவ்வாறெல்லாம் "தவறாக" அந்த வசனங்களைப் பயன்படுத்துகிறோம் தெரியுமா?  

@@@


Comments