15 சூரா அல்-ஹிஜ்ர் சிந்தனைகள்


 

அல் ஹிஜ்ர் அத்தியாயத்தின் மையக் கருத்து


இது திருமறையில் இடம்பெற்றுள்ள 15-வது அத்தியாயம். 


இந்த அத்தியாயம் இறக்கியருளப்பட்ட சூழல்: 


இது மக்காவில் - குறிப்பாக நபியவர்களின் மக்கத்து வாழ்வின் கடைசிப் பகுதியில் - இறக்கியருளப்பட்ட அத்தியாயம்.


இந்த அத்தியாயம் இறக்கியருளப் படுவதற்கு முன் - சூரா பனி இஸ்ராயில், சூரா யூனுஸ், சூரா ஹூத், மற்றும் சூரா யூசுப் - ஆகிய அத்தியாயங்கள் அருளப்பட்டு விட்டன. 


இந்தச் சூழல் எப்படிப்பட்டது? நபியவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இறந்து விட்டார்கள். நபியவர்களின் அருமை மனைவி அன்னை கதீஜா அவர்களும் மரணம் அடைந்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்தே - அண்ணலாரின் மிஃராஜ் பயணம் நடந்தேறியது.


ஆனால் நடந்தது என்னவெனில் - நபியவர்களின் மிஃராஜ் பயணத்தை நம்ப மறுத்து  - முஸ்லிம்களில் சிலர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டனர். 


மக்கத்துக் குறைஷியரின் கடுமையான எதிர் நடவடிக்கைகளின் காரணமாக - வேறு எவரும் இஸ்லாத்தை ஏற்பது என்பது முற்றிலும் தடை பட்டிருந்த சமயம் அது. அதனுடன் - நபியவர்களுடன் எஞ்சியிருந்த அந்த ஒரு நூற்றுக்கும் குறைவான நபித்தோழர்கள் - மக்காவில் நிம்மதியாக வாழ்ந்திட இயலாத சூழலும் அது.  


அடுத்து அவர்கள் - ஹிஜ்ரத் எனும் நாடு துறந்த பயணம் ஒன்றுக்குத் தயாராகப் போகிறார்கள் என்பதை அவர்களில் எவரும் அறிந்திருக்கவில்லை! 


இத்தகைய சூழலில் தான் - அல்லாஹ் அவர்களுக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருவதற்குப் பல திருமறை அத்தியாயங்களை இறக்கியருள்கிறான். அவற்றுள் ஒன்று தான் அத்தியாயம் அல் ஹிஜ்ர்! 


***


இப்போது இந்த அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பை ஒரு தடவை படித்து விட்டு வாருங்கள். 


***


அடுத்து நாம்  கேட்க வேண்டிய கேள்வி என்னவெனில்  - இந்த அத்தியாயம் - முதன்மையாக என்ன பாடத்தை அந்த நபித்தோழர்களுக்குக் கற்றுத்தர விழைகிறது?  


முதலிலேயே சொல்லி வைப்போம். 


இந்த அத்தியாயத்தின் மையக் கருத்து: "யகீன்" - (يقين) - எனப்படும் நம்பிக்கையில் உறுதி - சந்தேகமற்ற நம்பிக்கை. CONVICTION.   

 

***


அதுகாறும் நபியவர்களை நம்பி ஏற்றுக்  கொண்டிருந்த ஒரு சிலர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியதற்குக் காரணம் என்ன? நபியவர்களின் மிஃராஜ் பயணம் என்று ஒன்று நடைபெற்றிருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற "சந்தேகம்" தானே?   


இது போன்று அரை குறை சந்தேகங்களுடன் கூடிய "இறை நம்பிக்கையைத் தான்" இந்த அத்தியாயம் கேள்விக்குள்ளாக்குகிறது!  


***


1 இந்த அத்தியாயத்தில் - வானம், இதர கோள்கள், வாழ்க்கைக்கு உகந்த பூமி, அதிலே உறுதியாக நிலை நாட்டப்பட்டுள்ள மலைகள், எல்லா உயிரினங்களுக்கும் தேவையான உணவு, சூல் கொண்ட மேகங்கள், காற்று, மழை, குடிநீர் - இவற்றைப் பற்றி நம் சிந்தனையைத் திருப்புகிறான்! 

எதற்காக?  (பார்க்க வசனங்கள்: 16-22)   


நமது நம்பிக்கையை உறுதிபடுத்திடத்தான்! 


2 இந்த அத்தியாயத்தில் - ஷைத்தானாகிய இப்லீஸ் - ஆதமுக்கு சஜ்தா செய்திட மறுத்த சம்பவம் விரிவாக எடுத்துரைக்கப்  பட்டிருப்பது ஏன்?     


நமது உள்ளங்களில் "சந்தேகங்களை" விதைத்து, நமது நம்பிக்கையைக் கெடுப்பது அவன் தான் என்பதை நமக்கு உணர்த்திடத்தான்! 


(பார்க்க வசனங்கள் 28-44)   


3 இந்த அத்தியாயத்தில் - இப்ராஹிம் நபியின் விருந்தினர் முதலான ஒரு சில வரலாற்றுச் சம்பவங்கள் -   லூத் நபியை எதிர்த்து நின்ற சமூகம் அழிக்கப்பட்ட சம்பவம்,  மேலும் ஷுஐப் நபி பற்றிய குறிப்பு, ஸமூது சமூகத்தாரான ஹிஜ்ர் வாசிகள் அழிக்கப்பட்ட சம்பவங்கள் - இவை யாவும் எடுத்துரைக்கப் பட்டிருப்பதன் நோக்கம் என்ன? 


இறைத்தூதர்களை அநியாயமாக எதிர்த்து நிற்கின்ற சமூகங்கள் வரலாறு முழுவதும் அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அந்த அரபுலக மாந்தருக்கு - "அந்த இடங்கள் எல்லாம் நீங்கள் பயணம் செய்து வரும் இடங்கள் தான்! போய் பார்த்துக் கொள்ளுங்கள்!" - என்று அவர்களுக்கு வரலாற்றுச் சின்னங்களுடன் கூடிய ஆதாரங்களை எடுத்துக் காட்டி உணர்த்திடத் தான்! 


நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்) வரப்போகும் வழியில்தான் இருக்கிறது.(15:76)


(மேலும் பார்த்திட வசனங்கள் 51-76)


4 இந்த அத்தியாயத்தின் முதல் வசனம் - இறைவன் இறக்கி வைக்கின்ற இந்தத் திருமறையை - "தெளிவான குர்ஆன்" (குர்ஆனுன் முபீன்) என்று வர்ணிக்கிறது. ஏன்?

 

இறை நம்பிக்கையில் தெளிவற்றவர்களுக்கு உணர்த்திடத் தான்! ஆம்! அல்-குர்ஆனும் நம் நம்பிக்கையை உறுதிப் படுத்திடும் ஓர் மகத்தான அத்தாட்சி தான்!  


***


5 எந்த ஒரு ஆக்கப்பூர்வமான செயல் திட்டம் குறித்தும் சிந்தித்துப் பார்த்திட வாய்ப்பில்லாத அந்தச் சூழலில் - அன்றைய முஸ்லிம் சமூகத்திடம் அல்லாஹ் எதிர்பார்த்ததெல்லாம் உறுதியான நம்பிக்கையைத்தான்!  அந்த உறுதியை - யகீனை- மேலும் வளர்த்துக்  கொள்ள - இறைவன் காட்டுகின்ற வழிமுறைகள் என்னென்ன?  


தஸ்பீஹ் - ஸஜ்தா - இபாதத் - ஆகிய இந்த மூன்றும் தான்! 


நீர் - உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக! உமக்கு "யகீன்" வரும் வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக! (15:98-99)


6 அத்துடன் இந்த அத்தியாயம் அருமையானதொரு அற விழுமியத்தையும் (MORALITY) அன்றைய முஸ்லிம்களுக்குக் கற்றுத் தந்தது! 


நம்மை வெறுப்பவர்களிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் அது! 


(அவர்களுடைய முறையற்ற செயல்களை) அழகான முறையில் பொருட்படுத்தாமல் விட்டுவிடும்!    (15:85)


நம்மை வெறுப்பவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்வதில் என்ன அழகு இருக்கிறது என்கிறீர்களா?  பதிலுக்கு பதில் அவர்களை நாம் வெறுக்காமல் இருப்பதே அழகு தான்!  


7 இன்றைய சூழலோடு இந்த அத்தியாயத்தை ஒப்பிட்டுப் பார்ப்போம். இந்தியா உட்பட இஸ்லாமிய வெறுப்பினால் சூழப்பட்டுள்ள முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களுக்கும் இதே பாடங்கள் தான்! 


***


இதுவும் இணைவைத்தல் தான்!


அல் ஹிஜ்ர் அத்தியாயத்தின் பின் வரும் இரண்டு வசனங்களை சற்று கவனியுங்கள்.


(நபியே! முன்னுள்ள வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே, இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்பவர்கள் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்.) (15: 90-91)


இங்கே, குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்பது என்றால் என்ன?  


குர்ஆனின் ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டு, இன்னொரு பகுதியை ஏற்க மறுப்பதைத் தான் இது குறிக்கின்றது. 


அதாவது - "இதுவரை நபியவர்கள் சொன்னதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் மிஃராஜ் சென்றதை ஏற்க மாட்டோம்" - என்றார்களே ஒரு சிலர் - அவர்களைப் போன்றவர்களையே இது குறிக்கின்றது.  


இத்தகையவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? இத்தகையவர்களை இணை வைப்பவர்கள் என்று குர்ஆன் வர்ணிக்கிறது. 


ஆகவே, உங்களுக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீங்கள் அவர்களுக்கு விவரித்தறிவித்துவிடுங்கள். 

மேலும், இணைவைத்து வணங்கும் இவர்களைப் புறக்கணித்து விடுங்கள்.(15:94)


***


இதில் நமக்கென்ன பாடம்? 


நம்மில் சிலர் ரமளானில் மட்டும் தொழுவார்கள். பிற மாதங்களில் தொழ மாட்டார்கள்!


வேறு சிலர் - ரமளானில் தராவிஹ் மட்டும் தொழுவார்கள். கடமையான தொழுகைகளை விட்டு விடுவார்கள். 


நம்மில் சிலர் இப்படியும் உண்டு! அவர்கள் தொழுவார்கள். ஆனால் ஸகாத் கொடுக்க மாட்டார்கள்! 


ஒரு சிலருக்கு - தோற்றத்தில் மட்டும் அதிக கவனம். செயல்பாடுகளில் படு பலவீனம்!


இப்படி இன்னும் நிறைய வகையினர் நமக்குள் உண்டு! 


இந்த அத்தியாயத்தின் இறை வசனங்களின்படி இவர்கள் எல்லாம் இணை வைப்பவர்களின் பட்டியலில் இடம்பெற்று விடுகிறார்கள்.


அது என்ன இணை வைப்பு?


சான்றாக - 


ரமளானில் நோன்பு வைக்கும்போது, தராவிஹ் தொழும்போது - அவர்களை இயக்குவது இறையச்சம். 


ஆனால் ரமளானுக்குப்பிறகு தொழுகையை விட்டு விடும்போது  அவர்களை இயக்குவது அவர்களது மனோ இச்சை!


ஒரு சமயத்தில் இறையச்சத்தின் படி நடப்பதும், இன்னொரு சமயத்தில் மனோ இச்சையின்படி நடப்பதுவும் இணைவைப்பு தானே? 


இப்படிப்பட்ட இணை வைத்தலுக்குக் காரணமும் - யகீன் எனும் உறுதியான நம்பிக்கையில் நாம் வைக்கின்ற குறைபாடு தான்!


யகீனும் இபாதத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது!


அதாவது - நம்பிக்கையில் உறுதி இருந்தால் - வணக்க வழிபாடுகள் சிறப்பாக வெளிப்படும் நம்மிடமிருந்து.


நம்பிக்கையில் உறுதி இல்லாவிட்டால் - வணக்க வழிபாடுகளில் நமக்கு அலட்சியம் வந்து விடும்! 


நாம் முன்னரே சுட்டிக் காட்டியபடி - நாம் அல் ஹிஜ்ர் அத்தியாயத்தை ஓதுகிறோம், ஆனால் யகீன் எனும் உறுதியான நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை எனில் - அல் ஹிஜ்ர் அத்தியாயத்தை நாம் ஓதவே இல்லை என்றே பொருள்!  


தேவை: தனக்குள் "மாற்றம்" 


***

Comments