16 சூரா அன் - நஹ்ல் சிந்தனைகள்

 


இது திருமறையில் இடம்பெற்றுள்ள 16-வது அத்தியாயம். 


இந்த அத்தியாயம் இறக்கியருளப்பட்ட சூழல்: 


இது மக்காவில் - குறிப்பாக நபியவர்களின் மக்கத்து வாழ்வின் கடைசிப் பகுதியில் - இறக்கியருளப்பட்ட அத்தியாயம். இறக்கியருளப்பட்ட வரிசையில் (Chronological order) - இந்த அத்தியாயம் 70 -ஆவது அத்தியாயம் ஆகும்.   


***


இதோ, நபியவர்களும், ஒரு நூறுக்கும் குறைவான அந்த நபித்தோழர்களும் - இன்னும் கொஞ்ச நாட்களிலேயே ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு சென்று விட இருக்கிறார்கள். நபியவர்களின் இந்த வரலாற்றுப் பின்னணியை மனதில் கொண்டு, இந்த அத்தியாயத்தைப் படித்துப் பார்த்தால் - பல அருமையான  பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும்.   


***


இந்த அத்தியாயம் - நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப் புறச் சூழலை மிக அழகாக வர்ணிக்கிறது. அதனுடன் - இந்த இயற்கைச் சூழலிலிருந்து மனிதர்கள் எப்படியெல்லாம் பயன் அடைகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டிக் கொண்டே செல்கிறது இந்த அத்தியாயம். இறைவனின் நிஃமத்கள் குறித்த இறை வசனங்கள் நிறைய இடம் பெற்றுள்ள அத்தியாயம் இது. 


இயற்கைச் சூழல் குறித்த வசனங்கள் இந்த அத்தியாயத்தில் நிரம்பவும் இடம் பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்ற கோணத்தில் நாம்  சிந்தித்துப் பார்க்கலாம். பல இடங்களில் சிந்தித்துப் பாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது இந்த அத்தியாயம்.   


***


இந்த அத்தியாயம் தவ்ஹீத் எனும் இறை ஒருமை பற்றி அழுத்தம் திருத்தமாக எடுத்தியம்புகிறது. இந்த அத்தியாயத்தைப் பொறுத்தவரை அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை! 


***


இந்த அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரே இறைத்தூதர் - நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் மட்டுமே! ஏன் அப்படி என்றும் நாம் சிந்தித்து பார்க்கலாம். 


***


பின் வரும் இறை வசனம் - இந்த அத்தியாயத்திலுள்ள தனித்தன்மை வாய்ந்த வசனங்களுள் ஒன்று! 


16:90

-------

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். 


நம் ஆய்வுக்குரிய இறை வசனம் இது!


 ***


இந்த அத்தியாயம் பெரும்பான்மை வாதம் குறித்தும் ஒரு குறிப்பை வழங்குகிறது!  அது எதற்காக? (16: 92)


***


இந்த அத்தியாயத்துக்கு ஏன் அன் நஹ்ல் (தேனீக்கள்) என்று பெயர்? தேனீக்களைப் பற்றியும், தேன் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை பற்றியும், தேனின் பயன்கள் குறித்தும் இந்த அத்தியாயம்  பேசுவது ஏன்? சிந்திக்க வேண்டிய விஷயம் தான்!


***


நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள ஒவ்வொன்றையும் தனித்தனியான விஷயங்களாக எடுத்துக் கொண்டு விளக்கங்களைத் தேடிக் கொண்டிருந்தால் - இந்த அத்தியாயம் நமக்கு சொல்ல வருகின்ற மிக முக்கியமான பாடத்தை - "மையக் கருத்தைக்" - கற்றுக் கொள்ள நாம் தவறி விடுவோம். 


ஆம்! இவை ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் பிணைக்கப்பட்டிருப்பதைக் கூர்ந்து ஆய்வு செய்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்! 


@@@


தேனீக்களுக்கு வேறென்ன வேலை? 


பொதுவாக - திருமறையிலிருந்து ஏதோ ஒரு இறை வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு விளக்கம் அளிக்க முற்படுவது - ஆழமான புரிதலுக்கு வழிவகுப்பதில்லை. 


அதற்கு பதிலாக - நாம் எடுத்துக் கொண்டிருக்கும் இறை வசனம் எந்த அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கிறதோ அந்த அத்தியாயத்தின் கருப்பொருள் / மையக் கருத்து என்ன என்பதைப் புரிந்து கொண்டு - அந்த மையக்கருத்துக்கும் நாம் புரிந்து கொள்ள விரும்புகின்ற அந்த இறை வசனத்துக்கும் உள்ள தொடர்பு என்னவென்று சிந்தித்துப் பார்த்தால் - ஆழமான விளக்கங்கள் நமக்குக் கிடைத்திட வாய்ப்பு இருக்கிறது!


உதாரணம் ஒன்றின் மூலம் விளக்க முயற்சிப்போம். 


சூரா அன் நஹ்ல் இல் இருந்து  ஒரு இறை வசனத்தை எடுத்துக் கொள்வோம். 


16:90

-------

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். 


இந்த இறை வசனம் - இந்த அத்தியாயத்திலுள்ள தனித்தன்மை வாய்ந்த வசனங்களுள் ஒன்று! 


மேலோட்டமாக இந்த இறை வசனத்தைப் படித்துப் பார்த்தால் - ஒரு ஆறு - "இறைக் கட்டளைகளை" இவ்வசனம்  கோடிட்டுக் காட்டுகிறது. அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திடும் வசனம் இது என்பதோடு நாம் நிறுத்திக் கொண்டு விடுவோம். 


ஆனால் இதே இறை வசனத்தை - இந்த அத்தியாயத்தின் கருப்பொருளோடு இணைத்துப் பார்த்திட முயற்சி செய்வோம். 


***


சூரா அன் நஹ்ல் - திருமறையில் இடம்பெற்றுள்ள 16-வது அத்தியாயம். இந்த அத்தியாயம் மக்காவில் - குறிப்பாக நபியவர்களின் மக்கத்து வாழ்வின் கடைசிப் பகுதியில் - இறக்கியருளப்பட்ட அத்தியாயம். இறக்கியருளப்பட்ட வரிசையில் (Chronological order) - இந்த அத்தியாயம் 70 -ஆவது அத்தியாயம் ஆகும்.   


***


இதோ, நபியவர்களும், ஒரு நூறுக்கும் குறைவான அந்த நபித்தோழர்களும் - இன்னும் கொஞ்ச நாட்களிலேயே ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு சென்று விட இருக்கிறார்கள். நபியவர்களின் இந்த வரலாற்றுப் பின்னணியை மனதில் கொண்டு, இந்த அத்தியாயத்தைப் படித்துப் பார்த்தால் - பல அருமையான  பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும்.   


***


இந்த அத்தியாயத்துக்கு ஏன் அன் நஹ்ல் (தேனீக்கள்) என்று பெயர்? தேனீக்களைப் பற்றியும், தேன் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதைப் பற்றியும், தேனின் பயன்கள் குறித்தும் இந்த அத்தியாயம் பேசுவது ஏன்? சிந்திக்க வேண்டிய விஷயம் தான்! ஹிஜ்ரத் புறப்படத் தயாராக இருக்கின்ற நபித்தோழர்களுக்கு இந்த அத்தியாயம் என்ன பாடத்தைக் கற்றுத்தர விழைகிறது? 


***


சூரா அன் - நஹ்ல் அத்தியாயத்தின் மையக் கருத்தை - இதன் தலைப்பாகிய தேனீக்கள் (அன் நஹ்ல்) எனும் கோணத்திலேயே நாம் தேடிப்பார்க்கலாம். பின் வரும் இரண்டு இறை வசனங்களையும் கருத்தூன்றிப் படித்துப் பார்ப்போம். 


16:68

-------

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை (வஹி) அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),


16:69

--------

“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.  


***


சிந்தித்துணரும் மக்களுக்கு இதில் அத்தாட்சி இருக்கிறது என்கிறதே இவ்வசனம்! 


இப்படி சிந்தித்துப் பார்க்கலாமா? ஹிஜ்ரத் புறப்படுவதற்கு முன் ஏன் தேனீக்கள் பற்றி இறைவன் பேசிட வேண்டும்? ஹிஜ்ரத் செய்ததற்குப் பின் அங்கே மதீனாவில் முஸ்லிம்கள் என்ன செய்திட வேண்டும் என்பதற்கான சூசகமான வழிகாட்டலா? 


***

தேனீக்கள் என்ன தான் செய்கின்றன? தேனீக்களுக்கு இறைவன் வஹியை வழங்குகிறான் - "தேனை" எப்படி உருவாக்குவது என்று வழிகாட்டுவதற்காக! தேனீக்கள் ஒன்று சேர்ந்து அருமையான வீடு ஒன்றைக் கட்டுகின்றன. பின்னர் தம்மைச் சுற்றியுள்ள மலர்களிலிருந்து பூச்சாற்றை உறிஞ்சி தம் வயிற்றில் சுரக்கின்ற திரவத்துடன் கலந்து தேன் கூட்டில் சேமித்து வைக்கும்போது - நிவாரணம் அளிக்கின்ற தித்திப்பான தேன் நமக்குக் கிடைக்கின்றது!


***


தேனீக்களைப் போலவே - ஒட்டு மொத்த மனிதர்களுக்கும் - தனது இறுதித் தூதர் மூலமாக தன் புறத்திலிருந்து வஹியை வழங்குகிறான் இறைவன்! எதற்காக? தேன் போல இனிக்கின்ற, தேன் போன்று மனித இனத்தைப் பீடித்திருக்கின்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடிய "ஒன்றை" உருவாக்கித் தந்திடவா?     


அப்படியானால் முஸ்லிம்கள் உருவாக்கக் கூடிய "தேன் கூடு" என்பது எது? இறைவன் விரும்புகின்ற  இஸ்லாமிய சமூக அமைப்பா? மக்காவில் எந்த ஒன்றையும் கட்டியெழுப்பிட இயலாத  நிலையில், மதீனாவுக்குச் சென்று அதனைக் கட்டுங்கள் என்கின்றானா இறைவன்? 


இப்போது நாம் முதலில் எடுத்துக் கொண்ட அதே இறை வசனத்தை இங்கே கொண்டு வது பொறுத்திப் பாருங்கள்!


16:90

-------

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். 


***

முஸ்லிம்கள் "கட்டி"எழுப்பிட வேண்டிய தேன் "கூட்டின்" அடிப்படைத் தூண்கள் தாம் இந்த ஆறு இறைக் கட்டளைகளும் என்று நாம் புரிந்து கொள்ளலாமா? 

அதாவது இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற ஆறு இறைக் கட்டளைகளயும் இந்த அத்தியாயத்தின் மையக் கருத்தோடு / கருப்பொருளோடு - ஒப்பு நோக்கிப் பார்த்திடும்போது ....  


அல்லாஹ்வுடைய நிஃமத்களைத் தேடுவதிலும், அதனை சேகரிப்பதிலும், அவற்றுக்கு (ரிஸ்கன் ஹஸனாவாக) அழகு கூட்டி மெருகேற்றுவதிலும், அவைகளைப் பகிர்ந்தளிப்பதிலும் - 


நீதி கடைபிடிக்கப்பட்டாக வேண்டும்!


அழகிய நன்மைகளைச் செய்வதே நம் இலக்காக இருந்திட வேண்டும்.


நம்மைச் சுற்றியுள்ளோருக்கு தர்மமாகவும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.


மானக்கேடான விஷயங்களுக்காக இறைவனின் நிஃமத்களைப் பாழடித்து விடக்கூடாது.


தடை செய்யப்பட்ட தீமையான விஷயங்களுக்காகவும் அவைகள் பயன்படுத்தப் பட்டு விடக்கூடாது.


இறைவனின் நிஃமத்களை வைத்துக்கொண்டு - வரம்பு மீறிய அழிச்சாட்டியங்களிலும் ஈடுபட்டு விடக்கூடாது....

.. என்று ஆழமாக இதனைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

மேலும் சிந்திக்கலாம்! 

@@@@


Article 2 - as Published in FB



தேனீக்களிடம் பாடம் கற்போம்!


(சூரா அன்-நஹ்ல் சிந்தனைகள் - பகுதி - 2) 


திருக்குர்ஆனின் அன்-நஹ்ல் (தேனீக்கள்) அத்தியாயம் - நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப் புறச்சூழலை மிக அழகாக வர்ணிக்கிறது. அதனுடன் - இந்த இயற்கைச் சூழலிலிருந்து மனிதர்கள் எப்படியெல்லாம் பயன் அடைகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டிக் கொண்டே செல்கிறது இந்த அத்தியாயம். இறைவனின் நிஃமத்கள் குறித்த இறை வசனங்கள் நிறைய இடம் பெற்றுள்ள அத்தியாயம் இது. 


இயற்கைச் சூழல் குறித்த வசனங்கள் இந்த அத்தியாயத்தில் நிரம்பவும் இடம் பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்ற கோணத்தில் நாம் சிந்தித்துப் பார்க்கலாம். பல இடங்களில் சிந்தித்துப் பாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது இந்த அத்தியாயம்.  


இந்த அத்தியாயம் விவரிக்கும் இறைவனின் நிஃமத்களைக் கொஞ்சம் இங்கே பட்டியலிட்டுப் பார்ப்போம்: 


கால்நடைகள் - உணவுக்காகவும் ஆடைகளுக்காகவும் (16:5)


குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் - ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும் (16:8)


மழை மற்றும் குடி நீர் (16:10) 


மரங்கள், பயிர் வகைகள், பழங்கள் (16:11)


இரவு, பகல், சூரியன், சந்திரன், விண்மீன்கள் (16:12)


கடல், மீன்கள், ஆபரணங்கள், கப்பல் (16: 14)


மலைகள், ஆறுகள், பாதைகள்,  அடையாளச் சின்னங்கள் - landmarks (16:15-16)


கலப்பற்ற  பால் (16: 66)


நிவாரணம் அளிக்கின்ற தேன் (16:69)


குடும்பம், மனைவி, குழந்தைக்கள், பேரன்-பேத்திகள் (16:72)


சிந்திக்கின்ற இதயம், கண்பார்வை, , செவிப்புலன் (16:78)


உடுக்க உடை - ஆடைகள் (16:80) 


இருக்க இடம் - வீடுகள் (16:80)


நிழல் தரும் இடங்கள், குகைகள், தற்காப்புக்கு உதவும் கவசங்கள் (16:81) 

 

***


இங்கே இரண்டு வசனங்களை எடுத்துக் கொள்வோம்: 


16:18

-------

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை  நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.


16:81 (பகுதி) 

-------

நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பதற்காக, இவ்வாறு தன் அருட்கொடையை உங்களுக்குப் பூர்த்தியாக்கினான்.


***

இவ்வாறு - இறைவன் மனிதர்களுக்கு வழங்கியிருக்கக் கூடிய பற்பல அருட்கொடைகளைப் பற்றி இந்த அத்தியாயம் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே செல்கிறது! இறைவனின் அருட்கொடைகளை வரிசையாக நினைவுபடுத்திச் செல்வதற்கு காரணம் ஒன்று இருக்க வேண்டுமல்லவா? 


***


இந்த இடத்தில் - இந்த அத்தியாயத்தின் மையக் கருத்தைக் கொண்டு வந்து பொருத்திப்பார்த்து சிந்தியுங்கள். 


தேனீக்கள் என்ன செய்கின்றன? தமக்கான உணவை (ரிஸ்க்) எவ்வாறு சேகரிக்கின்றன? தேனீக்கள் - தம்  சுற்றுப்புறத்தில் இருக்கின்ற பூக்களைத் தேடிச் செல்கின்றன! மிக மென்மையாக அந்த மலர்களின் மீது அமர்ந்து அதன் சாற்றினை  உறிஞ்சிக் கொள்கின்றன.  அந்த மலர்களுக்கோ, அந்த செடி கொடிகளுக்கோ - எந்தவித "ஆபத்தினையும்" விளைவிக்காமல் அங்கிருந்து நகர்ந்து மிகப்பணிவோடு (16:69) தம் கூட்டுக்குத் திரும்புகின்றன - தாம் சேகரித்த அந்தப் பூச்சாற்றைத் தம் வயிற்றில் சுமந்து கொண்டு!


***


தேனீக்களின் இந்த வேலைத்திட்டத்தில் நமக்குப் படிப்பினை இல்லையா? நிச்சயமாக இருக்கிறது! 


தேனீக்களுக்கு அதன் வாழ்வாதாரம் (ரிஸ்க்) - அவைகளைச் சுற்றியுள்ள மலர்களில் (மட்டும்) அல்லாஹ் பொதித்து வைத்திருக்கின்றான்! ஆனால் மனிதர்களின் வாழ்வாதாரத்தின் மூலங்கள் மிக விரிவானவை! அதாவது மனிதனின் சுற்றுப்புறச் சூழல் (இயற்கை) முழுவதிலும் - மனிதனின் வாழ்வாதாரம் பரவி விரவிக் கிடக்கின்றன!


இப்போது மனிதன் என்ன செய்திட வேண்டும்?  


இறைவன் மனிதர்களுக்கு அளித்திருக்கின்ற நிஃமத்களை - அருட்கொடைகளை - முறைப்படி தமக்கெனப் பயன்படுத்திக் கொள்ள முதலில் அவனுக்குத் தேவை - ஒரு தேன் கூடு! அதாவது இறைவனின் வஹியின்படி நடக்கக் கூடிய ஒரு சமுதாய அமைப்பு! அடுத்து - அவன் - தன்னைச் சுற்றியுள்ள சூழல்களிலிருந்து - தன் வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொள்ள அவன் முனையும்போது அவனது மனநிலை எப்படி இருக்க வேண்டும்? 


மனிதன் தன் சுற்றுப் புறச்சூழலிலிருந்து தனக்கெனப் பெற்றுக் கொள்ளும் எந்த ஓர் "உணவும்" (ரிஸ்க்) அவனுக்குச் சொந்தமானதல்ல! அவை ஒவ்வொன்றும் இறைவன் மனிதனுக்கு அளித்த மாபெரும் அருட்கொடைகள்! நிஃமத்கள் (Blessings from God) என்ற மன நிலையுடன் தான் அவன் "இயற்கையை"  அணுகிட வேண்டும். 


அதற்கு நேர்மாறாக - இயற்கையில் தன் சுற்றுப்புறச் சூழலில் இருப்பவை அனைத்தும் தனக்கே சொந்தமானது என்ற எண்ணம் மனிதனுக்கு வந்து விட்டால் - அவன் ஆணவம் பிடித்தவனாக மாறி விடுகின்றான் (பார்க்க 16: 22,23 & 29). இயற்கையின் உரிமையாளன் இறைவனே என்பதை முற்றிலும் மறுத்து விடுகின்றான். தனக்கு அகப்பட்டதையெல்லாம் - தன் இஷ்டத்துக்குச் சூறையாடி தன் சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுகின்றான். 


 இப்போது - வசனம் எண் - 90 ஐ மீண்டும் இங்கே கொண்டு வருவோம்: அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த ஆறு இறை கட்டளைகளை இங்கே கொண்டு வந்து பொருத்திப் பார்ப்போம்: 


16:90

-------

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். 


***


இறைவனையும், வஹி எனப்படும் இறை வழிகாட்டுதலையும் ஆணவத்துடன் மறுத்து விடுகின்ற மனிதன் - கட்டியெழுப்புகின்ற சமுதாய அமைப்பில், நீதி இருக்காது (adl) , மாறாக வரம்பு மிறிய அக்கிரமங்கள் (bagha) கட்டவிழ்ந்து விடப்படும். நன்மைகளை (ihsan) அங்கே காண இயலாது. மானக்கேடானவைகளும் (fakhsha), பாவமான காரியங்களும் (munkar) மிகைந்திருக்கும் அங்கே! வழங்கி வாழ்தல் இருக்காது அங்கே! மாறாக அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு கொட்டமடிக்கின்ற சமூக அமைப்பாகத் தான் அது அமைந்திருக்கும்.   


**


இப்படிப்பட்ட சூழல் ஒன்றில் தான் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதித்தூதராக அனுப்பி வைத்தான் இறைவன். மக்காவில் தேன் கூட்டைக் கட்டவிடவில்லை குறைஷியர்கள். ஹிஜ்ரத்தைக் கடமையாக்கி அவர்களுக்கு மதினாவில் அடைக்கலம் தருகிறான் இறைவன். நபியவர்களும், நபித்தோழர்களும் மதினாவில் ஒரு - "கூட்டைக் கட்டி" - தேனைச் சேகரித்து" - ஒட்டு மொத்த உலகத்துக்கும் ஒரு முன்மாதிரிச் சமுதாயத்தை உருவாக்கிக்காட்டினார்கள்!   


இப்படிப்பட்ட நீதியும் நியாயமும்  மிக்க - "சமுதாயப் புணரமைப்பு"  ஒன்றை நிறுவிக் காட்டுவது தான் - இறைவன் நமக்களித்த அருட்கொடைகளுக்கு நாம் நன்றி செலுத்துவதாக அமைந்திடும் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.  


இதற்காக முயன்றுழைப்பதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறென்ன வேலை? 


***

இன்னொரு புறம், இறைவனின் வஹியை மறுத்து, எல்லாமே தனக்குச் சொந்தமென ஆணவத்துடன் இயற்கையை அணுகி, வரம்பு மீறிய அக்கிரமங்களைக் கட்டவிழ்த்துக் கொண்டு - எழுப்பப்படுகின்ற சமூக அமைப்பை பலவீனமானதொரு கட்டிடத்துக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறான் இறைவன். அந்த "கட்டிடம்" என்னவாகும்?   


16:26

-------

நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சிகள் செய்தார்கள்; அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடியோடு பெயர்த்து விட்டான்; ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது; அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது.


இந்த அத்தியாயம் சொல்ல வருகின்ற செய்தியின் ஆழம் புரிகின்றதா? 


Inspired by Shiekh Khaled Abou El Fadl


@@@


கலப்பற்ற பாலும், புத்தம்புதிய மீன் கறியும்!


(சூரா அன்-நஹ்ல் சிந்தனைகள் - பகுதி - 3) 


பின் வரும் இறை வசனங்களில் இறைவன் குறிப்பிட்டுக் காட்டுகின்ற (அருட்கொடைகள்) நிஃமத்களைப் பற்றி  சற்று சிந்திப்போம்.


16:66

-------

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.


கால் நடைகளிலிருந்து பெறப்படும் பாலைக்  "கலப்பற்ற பால்" (labanan khalishan) என்கிறான் இறைவன்!  Note this point! 


***


16:14

-------

அவனே (உங்களுக்காக) கடலை வசப்படுத்தித் தந்துள்ளான். அதிலிருந்து நீங்கள் புத்தம் புதிய மாமிசத்தைப் புசிக்க வேண்டும் என்பதற்காகவும், நீங்கள் அணிகின்ற அழகுப் பொருட்களை அதிலிருந்து வெளிக் கொணர்ந்திட வேண்டும் என்பதற்காகவும்! மேலும், கப்பல் கடலைப் பிளந்து கொண்டு செல்வதையும் நீர் காண்கின்றீர். மேலும், உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடுவதற்காகவும், அவனுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாய் நீங்கள் திகழ்வதற்காகவுமே இவையெல்லாம் இருக்கின்றன.


கடலிலிருந்து பெறப்படும் மீன்களைப் பற்றிக் குறிப்பிடும்போது - புத்தம் புதிய மாமிசம் (lahman tariyya) என்று குறிப்பிடுகிறான் இறைவன்! Please note this point too!

***

16:5-6

--------

கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையனிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள். மேலும், மாலை நேரத்தில் அவற்றை நீங்கள் ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவற்றை நீங்கள் ஓட்டிச் செல்லும் போதும் அவை உங்களுக்கு அழகாகக் காட்சியளிக்கின்றன.


கால் நடைகளிலிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள் என்று குறிப்பிடுகின்ற இறைவன் - அந்த கால்நடைகள் காலையிலும் மாலையிலும் - மேய்ச்சலுக்கு திறந்து விடப்படுவதையும் சேர்த்தே சொல்லிக் காட்டுகிறான் ! Again note this point!

***

இப்போது சிந்தனைக்காக சில கேள்விகள்: 


இறைவன் நமக்கு - கால் நடைகள் மூலமாக வழங்குகின்ற பாலை - அது எந்த ஒரு கலப்படமும் அற்றது என்கிறான்! ஆனால் இன்று நாம் அருந்துகின்ற பால் கலப்படமற்றதா? 


மீன் உணவு பற்றிக் குறிப்பிடும்போது அதனைப் "புத்தம் புதிய" இறைச்சி என்கிறான் இறைவன். நாம்  இன்று உண்ணுகின்ற மீன் அப்படிப்பட்டது தானா?   


அது போலவே - கால் நடைகளிலிருந்து நாம் இறைச்சி உணவைப் பெற்றுக் கொள்கிறோம் தான்! ஆனால் - அந்தக் கால் நடைகள் இயற்கைப் புல்வெளியில் மேய்க்கப்படுகின்றனவா என்ன? 


***


இறைவன் நமக்கு வழங்குகின்ற எந்த ஒரு அருட்கொடையையும் நிஃமத்தையும் - கலப்படமில்லாத தூய்மையான, எந்த ஒரு குறையும் அற்றவைகளாகத் தான் நமக்கு வழங்குகிறான் இறைவன்.  


ஆனால் - அவைகளை - அப்படியே அதன் தூய்மை எந்தவொரு விதத்திலும் கெட்டு விடாமல் - மனிதர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும் மனிதனின் கைகளில் தான் இருக்கிறது. அதனைக் கலப்படம் செய்து அதன் தூய்மையைக் கெடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும்  மனிதனின்  கரங்களில் தான் இருக்கின்றது!   


இந்த வசனத்தைக் கொஞ்சம் சிந்தியுங்கள்: 


16:67

-------

பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.


இறைவன் பேரிச்சையையும், திராட்சையையும் - தூய்மையானவையாகத் தான் படைத்துத் தந்திருக்கின்றான். ஆனால் மனிதன் அவற்றிலிருந்து போதையளிக்ககூடிய மதுவையும் தயாரிக்கிறான். நன்மை பயக்கும் "அழகிய உணவையும்" (rizqan hasana - wholesome sustenance) அவற்றிலிருந்து தயாரிக்கின்றான்!! 


இந்த அத்தியாயம் இறங்கி சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின் மது மதீனாவில் வைத்துத் தடை செய்யப்பட்டதையும் சேர்த்தே நாம் கவனித்திட வேண்டும் என்கிறார்கள் முஹம்மத் அஸத் அவர்கள்.


***


இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால் - இறைவன் நமக்களிக்கின்ற தூய்மையான உணவு வகைகளை அவற்றின் தூய்மை கெடாமல் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது நம் கடமை என்பதைத் தான்! 


வசனம் எண் 90 - ஐ கவனியுங்கள். அதில்  "இஹ்ஸான்" என்பது இறைவனின் கட்டளைகளில் ஒன்றாக சித்தரிக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள்! 


இந்தப் பின்னணியிலிருந்து பார்த்தால் - ஹள்ரத் உமர் (ரளி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் - பாலில் தண்ணீர் (கூட) கலப்பதற்கு அவர்கள் அனுமதிக்காதது ஏன் என்பது நமக்குப் புரிகிறதல்லவா? 


***


எனவே - கலப்பட உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு - ஒரு பொறுப்பு இருக்கிறது! அது பால்வளத்துறையாக, மீன் வளத்துறையாக இருந்தாலும் சரி, கால் நடை வளத்துறையாக  இருந்தாலும் சரி, மக்களுக்குத் தூய்மையான உணவு வகைகளை உறுதி செய்திட - மிகச் சிறப்பான தீர்வுகளை முன் வைக்கக் கூடியவர்களாக - இறை நம்பிக்கையாளர்களாகிய நாம் - நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 


வாய்ப்புகளை இறைவன் வழங்குவான் - என்ற நம்பிக்கை இருக்கிறது!

  

@@@

அழைப்புப்பணி என்பதை இப்படிப்புரிந்து கொள்ளலாமா? 


(சூரா அன்-நஹ்ல் சிந்தனைகள் - பகுதி 4) 



அழைப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் இறை வசனம் இது:


16:125

---------

(நபியே!) நீங்கள் (மனிதர்களை) மதிநுட்பத்துடனும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீங்கள் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள். உங்கள் இறைவன் வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான்.


***


இஸ்லாமிய அழைப்புப் பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஓர் இறைவசனமாக - நாம் இதனைப் புரிந்து கொள்கிறோம் - மேலோட்டமாக! 


ஆனால் இவ்வசனத்தின் பொருள் உண்மையிலேயே மிக ஆழமானது!


***


மீண்டும் இந்த அத்தியாயத்தின் மையக்கருத்துடன் இவ்வசனத்தையும் இணைத்துப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். 


நன்றாக கவனியுங்கள்!


வசனம் 125- ல் "உங்கள் இறைவனின் வழியின் பக்கம்" (இலா சபீலி ரப்பிக / ila sabeeli Rabbika) - என்று வருகிறது.


அடுத்து வசனம் எண் 69 - ஐ மீண்டும் கவனியுங்கள். 


16:69

-------


“பின்னர், நீ எல்லா விதமான கனியின் மலர்களிலிருந்தும் உணவருந்தி பின்னர், உனது இறைவனின் வழிகளில் (அவை உனக்கு) எளிதாக்கப்பட்டதாக இருக்கச் செல்”; இதனால் அதன் வயிறுகளிலிருந்து  ஒரு பானம் வெளியாகின்றது, அதன் நிறங்கள் மாறுபட்டவையாகும், அதில் மனிதர்களுக்கு குணப்படுத்துதலுண்டு, நிச்சயமாக இதிலும் சிந்திக்கக் கூடிய கூட்டத்தினர்க்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது.


இவ்வசனத்தில் - "உன் இறைவனின் வழிகளில்" (சுபுல ரப்பிக / subula Rabbika) என்று வருவதையும் கவனியுங்கள்! 


இதிலிருந்து என்ன புரிகிறது?


நமது அழைப்புப்பணி என்பது மிக ஆழமான பொருள்களை உள்ளடக்கியது! அது என்னவெனில் - இறை நம்பிக்கையாளர்கள் ஒரு சமூகப் புனரமைப்பில் (social reform) ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் இறைவனின் நிஃமத்களைத் தேடிச் சேகரித்து அவற்றை நீதியான முறையிலும் அழகான முறையிலும்  பகிர்ந்தளிக்கும் சமூகப் புனரமைப்பு அது! அந்தச் சமுதாயப் புனரமைப்பில் கலந்து கொள்ள / பங்கெடுத்துக் கொள்ள - இறைவன் வகுத்துத் தந்திருக்கும் பாதையில் வந்து எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என்பது தான் நமது அசலான அழைப்புப் பணி என்று நாம் புரிந்து கொள்ளலாமா? 


அழைப்புப் பணி என்பதன் ஆழத்தைப் புரிய வைக்கும் அத்தியாயம் இது!


@@@


ஆணவத்தின் ஆணிவேர்!


(சூரா அன்-நஹ்ல் சிந்தனைகள் - பகுதி 5)


திருமறை வசனங்களைப் படித்துக் கொண்டே வரும்போது - நமக்கு சில கேள்விகள் தோன்றலாம். அந்தக் கேள்விகளை அப்படியே அலட்சியப்படுத்திச் சென்று விடக்கூடாது! சிந்திக்க வேண்டும். 


சிந்தனைக்காக மீண்டும் இந்த வசனத்தை எடுத்துக்கொள்வோம்: .


16:69 

-------

“பின், நீ எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.  


இந்த வசனத்தில் வருகின்ற - "துலுலன்"- dhululan - என்ற சொல்லுக்கு என்ன பொருள்?  


தலூலன் (பன்மை: துலுலன்) என்ற சொல்லுக்கு இரண்டு பொருட்கள் உண்டு.  


1 இச்சொல் எளிமையான அகலமான வழிகளையும் குறிக்கலாம். 


2 அந்த வழிகளில் பணிவாகவும், கீழ்ப்படிதலுடன் செல்வதையும் குறிக்கலாம்.


முஹம்மத் அஸத் அவர்கள் இந்தச் சொல்லுக்கு பணிவு (humbly) என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். 

இச்சொல்லுக்குப் பணிவு என்ற பொருளை வைத்துக் கொண்டால், கேள்வி ஒன்று வருகிறது. 

நன்றாக கவனியுங்கள்: 


“நீ எல்லாவிதமான மலர்களிலிருந்தும் உணவருந்திய #பின்னர் (return journey) - உனது இறைவனின் வழிகளில் பணிவுடனே செல்க!"  


உணவருந்திய பின்னர் தான் பணிவு வேண்டுமா? அந்தத் தேனீக்கள் உணவைத் தேடிச் செல்லும்போது - உணவருந்துவதற்கு முன்பு (onward journey)- பணிவு தேவையில்லையா?  

***

சிந்தியுங்கள்!! 


அல்லாஹ் தருகின்ற உணவை - ரிஸ்கை - அடைந்து கொள்ளும் முன்னர் - அதாவது வெறும் வயிறாக இருக்கும் நிலையில் அல்லாஹ் பணிவு பற்றிப் பேசிடவில்லை! ஆனால் உணவைப் பெற்றுக் கொண்ட பின்னர் - பணிவுடன் செல் - என்று கட்டளையிடுகிறான் இறைவன்!


இதிலிருந்து என்ன புரிகிறது? 


அந்த தேனீக்களுக்கே இறைவன் சொல்லிக் காட்டுகின்றான் : "அந்த மலர்களைப் படைத்தவன் நான்! அந்த மலர்களில் சாற்றை உருவாக்கியவனும் நான்! உங்களை அங்கே கொண்டு வந்து சேர்த்தவனும் நான்! எனவே எந்த ஒரு பெருமையும் இன்றி பணிவுடன் கூட்டுக்குத் திரும்புங்கள்!"  


இதில் மனிதர்களாகிய நமக்கு என்ன பாடம்? 


பட்டினி கிடக்கும்போது - மனிதனுக்கு ஆணவம் வருவதில்லை! மாறாக அவன் பொருள்களைச் சேர்த்த பின்னரே - "இவையல்லாம் நானே சம்பாதித்தவை! என் திறமையினாலும், உழைப்பினாலும் என்னிடம் வந்து சேர்ந்தவை!" - என்ற ஆணவச் சிந்தனை வந்து விடுகிறது! 


அது அப்படியல்ல என்ற மனிதனுக்கு உணர்த்தும் விதமாகத்தான் - தேனீக்களை வைத்து நமக்குப் பாடம் நடத்துகிறான்! 


இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற அனைத்து நிஃமத்துகளுக்கும் - இறைவன் தான் சொந்தக்காரன் என்று புரிந்து கொள்ளும்போது ஆணவத்துக்கு அங்கே என்ன வேலை!


ஆனால் - இறைவன் தந்த நிஃமத்கள் அனைத்துக்கும் தானே சொந்தக்காரன் (ownership) என்று மனிதன் உரிமை கொண்டாடும்போது - அவன் சேர்த்து வைத்த செல்வத்தைக் கொண்டு தான்  - பாவங்களைக் கட்டவிழ்த்து விடுகிறான். செல்வத்தின் துணை கொண்டே - மானக்கேடான செயல்களைப் பரப்புகின்றான். செல்வம் தான் மனிதனின் வரம்பு மீறிய அழிச்சாட்டியத்துக்கும் வழி வகுக்கிறது. (பார்க்க வசனம் 16:90)


இறைவனை மறுத்து, இறைவனின் நிஃமத்துகளையும் மறுத்து - இயற்கைப்பெருவெளியின் எல்லா வளங்களுக்கும் தாமே உரிமை கொண்டாடுகின்ற மனிதனின்  மனநிலை தான் - ஆணவத்தின் ஆஂணிவேர்! 


இந்த அத்தியாயத்தில் குறிப்பாக செல்வந்தர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும்  நல்லதொரு பாடம் இருக்கின்றது!


@@@



Comments