ரமளான் சிந்தனைகள்



1  தன்னைத் தானே "மாற்றிக் கொள்தல்" அவசியம்!


சகோதர சகோதரிகளே! 


இந்த ரமளானில் - திருமறை திருக்குர்ஆனை - அத்தியாயம் அத்தியாயமாக எடுத்துக் கொண்டு, பொருளுடன் அறிந்து ஓதி, சிந்தித்து, ஆய்ந்து - அதிலிருந்து அற விழுமியப் பாடங்களைக் (MORAL MESSAGES) கற்றுக் கொண்டு அவைகளை உங்கள் வாழ்வில் கொண்டு வர முயற்சிசெய்யுங்கள். 


மூன்று நாட்களுக்கு ஒரு அத்தியாயம் எனில் இந்த ரமளானில் ஒரு பத்து அத்தியாயங்களை - ஓரளவுக்கேனும் கற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. 


முதலில் ஒரு அத்தியாயத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒரு தடவை அரபியிலேயே ஓதிக் கொள்ளுங்கள். பிறகு அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப் படியுங்கள். பின் அந்த அத்தியாயம் இறக்கியருளப்பட்ட சூழலைப் புரிந்து கொள்ளுங்கள். அதற்கென நபியவர்களின் சீராவின் பகுதியைப் படித்துக் கொள்ளுங்கள். 


நபியவர்களும் அந்த நபித்தோழர்களும் அந்த சூழலில் சந்தித்து வந்த வாழ்வியல் சவால்களைப் புரிந்து கொள்ளுங்கள். பின் அந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்தில் வைத்து என்னென்ன பாடங்களைக்

கற்றுக் கொடுத்திருக்கிறான் இறைவன் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 

அதில் தான் நமக்கும் பாடம் இருக்கிறது! அதன்படி - தன்னைத் தானே "மாற்றிக் கொள்தல்" அவசியம்! கொஞ்சமேனும்! 


***


"திருமறையின் ஒரு அத்தியாயத்தைக் கற்றுக் கொள்வதற்கு முன்னரான ஒருவரின் வாழ்க்கைக்கும்,அந்த அத்தியாயத்தைக் கற்றுக் கொண்டதற்குப் பின்னரான அவரது வாழ்க்கைக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இருக்கப் போவதில்லை எனில் - அவர் அந்த அத்தியாயத்தைக்  கற்றுக் கொள்ளவே இல்லை என்றே பொருள்!" - ஓர் விரிவுரையாளரின் கருத்து! 


SELF TRANSFORMATION


Comments