59 - சூரா அல் ஹஷ்ர் சிந்தனைகள்



 சூரா அல் ஹஷ்ர் சிந்தனைகள் 

அத்தியாயம் எண்:  59


***

இது மதீனாவில் வைத்து இறக்கியருளப்பட்ட அத்தியாயம் ஆகும். பனீ நதீர் யூதர்களின் சதித் திட்டத்தை முறியடித்து அவர்கள் மதீனாவை விட்டும் வெளியேற்றப்பட்ட சம்பவத்தின் பின்னணீயில் இது இறக்கியருளப்பட்டது. அந்த வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வது அவசியம்.  


***


ஆனால் இந்த சூராவின் மையக் கருத்து என்பது - பனீ நதீர் கூட்டத்தார் வெளியேற்றப்பட்ட பின்னர் - அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களை பங்கீடு செய்யும்போது ஒரு முஸ்லிமின் மனப்பாங்கு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பது தான்! 


***


பனீ நதீர் கூட்டத்தாரின் கோட்டையை நபியவர்களுடன் சேர்ந்து முற்றுகையிட்டவர்கள் - வசதியற்ற மக்கத்து முஹாஜிரீன்களும், ஓரளவுக்கு வசதியான மதீனாவின் அன்ஸார்களும் தான்! 


பொதுவாகப் பார்த்தால் நாம் என்ன சொல்வோம்? போரில் கைப்பற்ற பொருட்களை அவர்களுக்கிடையில் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்து விட வேண்டியது தானே என்று தான் நாம் சொல்வோம். 


ஆனால் அல்லாஹ் வேறொரு "கணக்கை" வைத்திருந்தான்! அது தான் இந்த அத்தியாயத்தின் கருப்பொருள் அல்லது மையக் கருத்து! 


அந்த மையக் கருத்து என்ன? 


"செல்வம் என்பது நம்மிடையே இருக்கின்ற செல்வந்தர்களுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பது தான்!" 


பின் வரும் வசனம் குறித்து சிந்தியுங்கள்: 


59:7

-----

அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.


***


இந்தப் பின்னணியில் இந்த அத்தியாயத்தின் இன்ன பிற வசனங்களை ஆய்வு செய்து பாருங்கள். ஆழமான ஒரு கருத்தினை இறை நம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் பதிய வைக்கக்கூடிய அத்தியாயமாகும் இது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 


***


இந்த அத்தியாயம் - இறைவனைத் தஸ்பீஹ் செய்வது பற்றிய வசனத்துடன் தான் தொடங்குகிறது. 


59:1

-----

வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வையே துதி (தஸ்பீஹ் ) செய்து கொண்டிருக்கிறது. மேலும், அவனே யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். (IFT)


மேலும் இந்த அத்தியாயத்தின் இறுதி இறை வசனங்கள் - இறைவனின் தனித்தன்மை வாய்ந்த "பண்புகளை" (sifaat) அடுக்கிக் காட்டுகின்றன.


59:22

-------

அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.


59:23

-------

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.


59:24

-------

அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.


***


உலகப்பொருட்களைப் பங்கீடு செய்வதில் - இறைவனின் தீர்ப்பை மனம் உவந்து ஏற்றுக்கொள்ள மறுத்தால் - நமது - தஸ்பீஹில் - குறை வைக்கிறோம் என்பது பொருள்!


அது இறைவனை மறந்து விடுவதற்குச் சமம் என்று எச்சரிக்கிறது பின்வரும் இறைவசனம். 


59:19

-------

அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.


***


அவ்வாறு மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் - தன் அரும்பண்புகளை அடுக்கிக்காட்டி சூராவை நிறைவு செய்கிறான் வல்லோன் அல்லாஹு த ஆலா. 


***


மதீனத்து அன்ஸார்களைப்பொருத்தவரை இது மிகப்பெரிய தியாகம் தான். ஆனால் - அந்த அன்ஸார்கள் இந்தப் பங்கீட்டை எப்படி மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள் என்று அல்லாஹ் அவர்களைப் பாராட்டிப் பேசிடத் தயங்கவில்லை!


59:9 (பகுதி)

-------

ஹிஜ்ரத்* செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கின்றார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களுக்கு அளிக்கப்பட்டவை தங்களுக்கும் தேவையானதே என்று மனத்தளவில்கூட அவர்கள் நினைப்பதில்லை. மேலும், தாங்களே தேவையுள்ளவர்களாய் இருந்தாலும்கூட, தங்களைவிடப் பிறருக்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள். உண்மை யாதெனில், யார் தங்கள் மனத்தின் உலோபித்தனத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்களோ அவர்களே வெற்றி பெறக்கூடியவர்களாவர்.


***


இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்.

Comments