மார்க்க சட்டங்களின் நோக்கங்கள்!



மார்க்க சட்டங்கள் எனப்படும் - இஸ்லாமிய சட்டங்கள் - திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த இரண்டையும் ஆய்வு செய்து "பிக்ஹ்" என்று சொல்லக்கூடிய, மார்க்க அறிஞர்களுடைய (understanding) புரிதல்களைக் கொண்ட நூல்கள் இருக்கின்றன. இவற்றிலிருந்து தான் நாம் மார்க்க சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வருகின்றோம்.


இங்கே மார்க்க சட்டங்களை  நடைமுறைக்குக் கொண்டுவரும் போது நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த இறை சட்டங்களை - மார்க்க சட்டங்களைப் பின்பற்றுவதற்கு அல்லாஹ் ஒரு சில நோக்கங்களை அவற்றுள் பொதித்து வைத்திருக்கின்றான். அந்த உயரிய நோக்கங்களைத் தான் நாம் அற விழுமியங்கள் (Islamic morality and ethics) என்று அழைக்கின்றோம்! இஸ்லாமிய சட்டங்கள் அழகைக் (ihsan) கொண்டு வருபவை. கருணையை (rahmah) அடிப்படையாகக் கொண்டவை. இலகுவை (yusr) நோக்கமாகக் கொண்டவை. நற்பண்புகளை (akhlaq) நோக்கமாகக் கொண்டவை. 


சட்டங்களை  நாம் நடைமுறைக்குக் கொண்டுவரும் போது - அல்லாஹுத் தஆலா எந்த நோக்கங்களுக்காக அந்த சட்டங்களை நமக்குக் கொடுத்து இருக்கின்றானோ - அத்தகைய உயரிய நோக்கங்கள் (higher objectives) நிறைவேறுகின்றனவா என்று பார்க்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.  

 

மார்க்க சட்டங்கள் நடைமுறைக்கு வருகிறது என்று சொன்னால் - அதில் ஒரு அழகு இருக்கவேண்டும்! அதில் ஒரு நீதி இருக்கவேண்டும்! அதில் ஒரு கருணை இருக்கவேண்டும்! அதில் ஒரு சலாமத் எனும் அமைதி இருக்கவேண்டும்.  ஆன்மீக ஒளியில் சொல்வதாக இருந்தால் அல்லாஹ்வுடைய ஒளி அவற்றில் பிரதி பலித்திட வேண்டும்.  


இதற்கு நேர் மாற்றமாக மார்க்க சட்டங்களை - அதனுடைய உட்பிரிவுகளில் புகுந்து கொண்டு அதனை உறுதியாக கடை பிடிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அதை நடைமுறைக்கு கொண்டு வரும்பொழுது அதில் அழகு இல்லை, அசிங்கம் இருக்கிறது; அதில் நீதி இல்லை, அநீதி இழைக்கிறது; அதில் ஒளி இல்லை, இருள் இருக்கிறது - என்று சொன்னால் நம்முடைய புரிதலில் தவறு இருக்கிறது என்று தான் நாம் கூற வேண்டும்!  


இதனை ஒரு உதாரணத்தைக் கொண்டு நாம் விளக்கலாம். 


வாசனை திரவியம் ஒன்றை நாம் தயாரிப்பதாக வைத்துக் கொள்வோம். பல பூக்களில் இருந்து அதற்கான "சாறுகளைக்" (essence) கண்டெடுத்து ஒன்று சேர்த்து அந்த வாசனை திரவியத்தை நாம் உருவாக்குகிறோம். ஆனால் நாம் எதிர்பார்த்த "வாசனை", "மணம்" அதிலிருந்து வெளிவரவில்லை என்றால் என்ன பொருள்? மாறாக - துர்நாற்றம் ஒன்று அதிலிருந்து வெளிப்படுகிறது என்றால் என்ன பொருள்? தயாரிப்பு சரியில்லை என்றே பொருள்! 


இன்னொரு உதாரணம்: உணவுப் பண்டம் ஒன்றை நாம் சமைத்திட விழைகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதனைச் செய்வதற்குத் தேவையான பொருட்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு,  அதனைத் தயாரித்து முடித்த பின்பு - அதற்குரிய ருசியை அது தரவில்லை என்று சொன்னால் நாம் அதனைத் தயாரிப்பதில் தவறு செய்து விட்டோம் என்று தான் பொருள்!


இந்த உதாரணங்களை வைத்துக்கொண்டு இஸ்லாமிய சட்டங்களையும் அந்த சட்டங்களைப் பின்பற்றும் போது ஏற்படக்கூடிய விளைவுகளாக - நற்பண்புகள், நீதி, அழகு இவையெல்லாம்  வெளிப்படவில்லை என்று சொன்னால் நாம் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏதோ தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

Comments