ரஷத - எனும் திருக்குர்ஆனின் கருத்தாக்கம்

 நேர்வழி என்பதைக் குறித்திடும் இரண்டு குர்ஆனிய சொற்கள்

(ர-ஷ-த - எனும் திருமறைச் சொல் ஆய்வு ) - 1

2:2

===

"இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை; இறையச்சமுடையோர்க்கு (இது) நேரான வழியைக் காட்டும்.


இவ்வசனம் - "ஹுதன் லில் முத்தகீன்" - என்று முடிவடைகிறது. இதன் பொருள் - "இறையச்சமுடையோர்க்கு (இது) நேரான வழியைக் காட்டும்" - என்பதாகும்.  ஹுதன், ஹுதா, ஹிதாயத் - போன்ற திருமறைச் சொற்களை நாம் அறிந்தே வைத்திருக்கிறோம்.  ஹுதன் எனும் இச்சொல் தான் இங்கே #நேர்வழி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  


அடுத்து பின்வரும் வசனத்தைப் பார்ப்போம்


2:186

=====

மேலும் (நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், “நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன்; என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன் (என்பதைத் தெரிவித்து விடுங்கள்). எனவே அவர்கள் என்னுடைய அழைப்பை விரைந்து ஏற்றுக் கொள்ளட்டும். என்மீது நம்பிக்கை கொள்ளட்டும். அதனால் அவர்கள் #நேர்வழி அடைந்திட முடியும்." (IFT) 

இந்த வசனம் - ல-அல்லஹும் யர்ஷுதூன் - என்று முடிவடைகிறது! இதன் பொருள் "அதனால் அவர்கள் #நேர்வழி அடைந்திட முடியும்" - என்பதாகும். ஆனால் இங்கே #நேர்வழி என்பதைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப் பட்டிருக்கும் சொல் - "ர-ஷ-த" (Ra-Sha_Da) எனும் வேர்ச் சொல்லிலிருந்து பெறப்படுகின்ற யர்ஷுதூன் - என்பதாகும்.  "அல்-ரஷீத்" என்பது அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களில் ஒன்றாகும். இதனை - நேர்வழி காட்டுபவன் - என்று மொழிபெயர்க்கலாம். நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் - என்பதைக் குறிக்கும் அரபிச் சொல் - குலஃபாவுர் ராஷிதூன் - என்பதையும் நாம் அறிவோம். 


இப்போது கேள்வி என்னவெனில் - மேற்கண்ட இரண்டு சொற்களும் நேர்வழி என்பதைத்தான் குறித்திடும் எனில் இரண்டு சொற்களுக்கும் இடையில் வேறுபாடு ஒன்று இருக்கும் தானே. அது என்ன?  


ஏன் இங்கே நேர்வழி என்று மொழிபெயர்க்கப் படவில்லை? 

=================

பகுதி - 2

ஒரு இறை வசனமும் அதன் - நான்கு தமிழ் மொழிபெயர்ப்புகளும்:  


18:66

===== 


“உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.


அல் கஹ்ஃப்   அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள இந்த இறைவசனம் - "உல்லிம்த ருஷ்தா" - என்று முடிவடைகிறது! இச்சொல் (மட்டும்) தமிழில் எவ்வாறு மொழிபெயர்க்கப் பட்டுள்ளது  என்பதைக் கவனியுங்கள்


"உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை... 

"உமக்குக் கற்பிக்கப்பட்ட கல்வியில் பயனளிக்கக்கூடியதை..."

"தங்களுக்கு கற்றுத் தரப்பட்டிருக்கும் நல்லறிவை... "

"உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட நன்மையானவற்றை...."


"ருஷ்தா" - என்பதற்கு ஏன் இப்படி ஒரு மொழிபெயர்ப்பு? 


சரி, ஆங்கில மொழிபெயர்ப்புக்குச் செல்வோம்!


Moses said to him, “May I follow you, so that you may teach me some of the "guidance" you were taught? (18:66)


இங்கே - "ருஷ்தா" என்பதனை - Guidance - என்று மொழிபெயர்த்துள்ளார்கள்! 


தமிழில் - ருஷ்தா - எனும் சொல்லுக்கு ஏன் #நேர்வழி என்று மொழிபெயர்க்கப் படவில்லை? 


ஏனெனில் இச்சொல்லின் பொருள் மிக ஆழமானது!


பகுதி - 3


இச்சொல்லின் அகராதிப் பொருள் என்ன?

அடுத்து இச்சொல்லின் ஆங்கில அகராதிப் பொருள் என்ன என்று பார்த்து வருவோம்:


Ra-sha-da (as a verb): To be on the right way, follow the right course, be well guided, to become sensible, become mature, grow up, to come of age...



Rushd (as a noun): Integrity of actions, proper, sensible, conduct, reason, good sense, consciousness, #maturity(of the mind), full legal age...   : 


Rashaad: integrity of conduct; straightforwardness, forthrightness


Raashid: Rightly guided


***


"ரஷத" எனும் வேர்ச் சொல்லிலிருந்து பெறப்படுகின்ற - "யர்ஷுதூன், ருஷ்து, ருஷ்தன், ருஷ்தஹு, ரஷதா, ரஷாத், ராஷிதூன், ரஷீத், முர்ஷித்" -   ஆகிய  இதன் பல்வேறு கிளைச் சொற்களுடன் மொத்தம் 19 தடவைகள் திருக்குர்ஆனிலே பயன்படுத்தப்பட்டுள்ளன.  இந்தச் சொற்கள் - திருக்குர்ஆனில்  எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதையும் நாம் பார்த்திட வேண்டியுள்ளது!  


பகுதி - 4


தவ்ராத்தில் நேர்வழி இருக்கும்போது, எதற்காக ஹிள்ர்?

நமக்கெல்லாம் தெரியும், நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட வேதம் தான் தவ்ராத் என்பது என்று! அந்த தவ்ராத் வேதத்தில் நேர்வழியும் ( ஹுதன்) இருக்கிறது! ஆன்மிக ஒளியும் ( நூர்) இருக்கிறது! - என்கிறான் இறைவன்! பின் வரும் இறை வசனத்தில்: 


5:44 

====

"தவ்றாத்" (என்னும் வேதத்)தையும் நிச்சயமாக நாம்தான் இறக்கிவைத்தோம். அதில் #நேர்வழியும் இருக்கிறது; ஒளியும் இருக்கிறது." (ஒரு பகுதி மட்டும்) 


இப்போது முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்போம்!


நபி மூஸா (அலை) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட தவ்ராத்தில் #நேர்வழி இருக்கும்போது, எதற்காக அல்லாஹ் அவர்களை ஹிள்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அனுப்பி வைத்தான்? 


இக்கேள்விக்கான பதில் - பின்வரும் இறைவசனத்திலேயே நமக்குக் கிடைத்து விடுகிறது!  


18:66

=====


மூஸா, அவரிடம் கேட்டார்: "தங்களுக்கு கற்றுத் தரப்பட்டிருக்கும் நல்லறிவை (ருஷ்தன் ) நீங்கள் எனக்குக் கற்றுத் தரும் பொருட்டு உங்களை நான் பின் தொடரட்டுமா?"


Moses said to him, “May I follow you, so that you may teach me some of the "guidance"(rushdan) you were taught? (18:66)


அதாவது - ஹிள்ர் (அலை) அவர்களிடம் மூஸா (அலை) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதற்கான காரணம் ஹுதன்/ ஹிதாயத் என்றழைக்கப்படும் நேர்வழியைக்  கற்றுக் கோள்வதற்காக அல்ல! அது அவர்களுக்கு தவராத் வேதத்தில் வைத்தே கிடைத்து விடும். மாறாக - ஹிள்ர் (அலை) அவர்களிடம் நபி (மூஸா) அலை அவர்கள் அனுப்பி வைக்கப்ட்டதற்கான காரணம் - ருஷ்த்- எனும் ஒன்றைக் கற்றுக் கொள்வதற்காகத் தான்! 


அப்படியானால் அந்த "ருஷ்த்" என்பது என்ன?  


பகுதி - 5

செயல்படுவதற்கு முன் விளைவுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்!  


"ருஷ்த்" எனும் திருக்குர்ஆனின் கருத்தாக்கத்துக்குத் - தற்காலிகமாக "மிகச் சரியான வழி" (the right way / the right course of action) என்ற ஒரு பொருளை  வைத்துக் கொள்வோம். இச்சொல்லின் ஆழமான பொருளை, மூஸா-ஹிள்ர் சம்பவங்கள் மூலமாகவே நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும்!


அல் கஹ்ஃப் அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கின்ற - மூஸா (அலை) ஹிள்ர் (அலை) - இருவரின் மூன்று சம்பவங்கள் நம்மில் பெரும்பாலோர் அறிந்ததே. அவைகளை நான் இங்கே மீட்டுச் சொல்ல வேண்டிய தேவை இல்லை! பார்க்க இறை வசனங்கள் (18: 60 82)-


அந்த மூன்றும் மூன்று விதமான சம்பவங்கள்! ஹிள்ர் (அலை) அவர்கள் அந்த மூன்று விதமான சம்பவங்களின் போதும் யதார்த்ததில் தம் கண் முன்னே என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டவுடன் - அவைகளுக்கான மிகச் சரியான செயல்பாட்டை அவர்கள் மேற்கொள்கிறார்கள். 


ஆனால்  மூஸா (அலை) அவர்களுக்கு, ஹிள்ர் (அலை) அவர்களின் "வித்தியாசமான" செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை! பின்னர் ஹிள்ர் (அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களுக்கு தமது செயல்பாட்டிற்கான காரணத்தை விளக்கியதும் தான் மூஸா (அலை) அவர்களுக்கு  உண்மை நிலவரம் புரிய வருகின்றது. 


எதனைப் புரிய வைத்தார்கள் ஹிள்ர் (அலை) அவர்கள்? 


தமது மூன்று விதமான செயல்பாடுகளும் - அவை ஒவ்வொன்றும் ஏற்படுத்துகின்ற விளைவுகளைக் கணக்கில் கொண்டே (considering the consequences) தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன என்பதைத் தான் புரிய வைத்தார்கள் ஹிள்ர் (அலை) அவர்கள்! இப்படிப்பட்ட செயல்பாட்டைத் தான் - "ருஷ்தன்" எனும் சொல்லாக்கம் குறிக்கின்றது! அதனால் தான் மூஸா (அலை) அவர்கள் - ஹிள்ர் (அலை) அவர்களிடம் இவ்வாறு கேட்டதாக திருமறை சுட்டிக்காட்டுகிறது:


மூஸா, அவரிடம் கேட்டார்: "தங்களுக்கு கற்றுத் தரப்பட்டிருக்கும் நல்லறிவை (உல்லிம்த ருஷ்தா) நீங்கள் எனக்குக் கற்றுத் தரும் பொருட்டு நான் உங்களுடன் இருக்கலாமா?" (18:66)


இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்  என்னவென்றால் - எந்த ஒரு சூழலிலும் - நாம் எடுத்து வைத்திட வேண்டிய "மிகச் சரியான செயல்பாடு" என்பது -  அந்த செயல்பாடு எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்ததே!  


ஆனால் இங்கே கேள்வி என்னவெனில் - மூஸா (அலை) அவர்கள் கற்றுக் கொண்டு விட்டார்கள் என்பது உண்மை தான்! நாம் இதனைக் கற்றுக் கொள்வது எப்படி? 


நமது வாழ்வின் அன்றாட சவால்களின்போது.... 

நடைமுறைத் தீர்வு வேண்டுமா?

பகுதி - 6


ஹிதாயத்  எனும் நேர்வழி வழங்குவது என்பது - "எப்படி இறைவனிடமிருந்து மட்டுமே" என்பது போலவே - நமது வாழ்வின் அன்றாட சவால்களின்போது - மிகச்சரியான தீர்வுக்கான வழிமுறைகளை ((ருஷ்தன்) நமக்குக் கோடிட்டுக் காட்டுவது என்பதும் - இறைவன் புறத்திலிருந்தே என்பதைநாம் மறந்து விடக்கூடாது!


எனவே நமது பிர்ச்னைகளுக்கான தீர்வுகளை நாம் - இறைவனிடம் துஆ செய்து கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்வது தான் மிகச்சிறந்த வழியாகும்! 


திருமறையின் இரண்டு இறை வசனங்களை இங்கே எடுத்துக் கொள்வோம்:  


2:186

====

மேலும் (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், "நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன்; என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு நான் பதிலளிப்பேன்; ஆதலால் அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;  என்மீது நம்பிக்கை கொள்ளட்டும். அதனால் அவர்கள் நேர்வழி அடைந்திட முடியும்." (My design)


இந்த வசனம் - "ல-அல்லஹும் #யர்ஷுதூன்" - என்று முடிவதைக் கவனியுங்கள்


18:10

=====

அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் "எங்கள் இறைவா! உன்னுடைய தனிப்பட்ட கருணையை எங்கள் மீது சொரிவாயாக! இன்னும் எங்கள் #காரியத்தில் நேர்வழியை (எங்களுக்கு இலகுவாக்கி) அமைத்துத் தருவாயாக!”- என்று கூறினார்கள்.


இந்த இறை வசனம் - மின் அம்ரினா #ரஷதா - என்று முடிவடைகிறதல்லவா? 


இந்த வசனத்தில் வரும் #அம்ர் என்பதன் பொருள் (நமக்கு நடைபெற வேண்டிய)  ஒரு காரியம்  என்பதாகும்!


எனவே தான் - மின் அம்ரினா #ரஷதா - என்பதை - எங்கள் #காரியத்தில் நேர்வழியை அமைத்துத் தருவாயாக!”- என்று மொழிபெயத்திருக்கிறார்கள்!


அதாவ்து இந்த துஆவின் மூலம் - நமது பிரச்னைக்கான நடைமுறைத் தீர்வு ஒன்றைத்தான் நாம்  இறைவனிடம் கேட்கிறோம்! அதாவது - Practial solution!


சரி, துஆ கேட்டு விட்டால் - தீர்வு கிடைத்திடுமா? 


மேலும் சிந்திப்போம்!


நம்பிக்கையும் நேர்வழியும்!

பகுதி - 7

நமது ஒவ்வொரு காரியத்தின் போதும் - நாம் மேற்கொள்ள வேண்டிய மிகச் சரியான வழி (ருஷ்தன்) என்பது இறைவன் புறத்திலிருந்து நமக்கு  எவ்வாறு கிடைத்திடும்?


திருக்குர்ஆன் சுட்டிக் காட்டுகின்ற வழிமுறைகளை இங்கே ஒவ்வொன்றாகக் காண்போம்:


1 நம்பிக்கையும் நேர்வழியும்  (Iman and Hidayat)


குகைத் தோழர்களின் கதையை எடுத்துக் கொள்வோம். அதில் நமக்கு மிகத் தெளிவான வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன! 


அவர்களின் வரலாறு நமக்குத் தெரிந்தது தான்! அவர்கள் இறை நம்பிக்கை கொண்ட ஒரு சில இளைஞர்கள். அவர்கள் - தங்களின் இருப்பு என்பதே கேள்விக்குறியாகியிருந்த சமயத்தில் தான் - இறைவனை இறைஞ்சுகிறார்கள். இறைவனிடம் இருந்து நடைமுறைத் தீர்வு ஒன்றும் அவர்களுக்குக் கிடைத்து விடுகிறது. அதற்கான காரணம் என்ன என்பதைப் பின் வரும் இறை வசனம் நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது!


18:13

=====

அவர்களின் உண்மையான சரிதையை நாம் உமக்கு எடுத்துரைக்கிறோம். திண்ணமாக, அவர்கள் தம் இறைவன் மீது #நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்களாவர். நாம் அவர்களை #நேர்வழியில் (ஹுதன்) மேலும் மேலும் முன்னேறச் செய்தோம்.


ஆமாம்! இறைவன் புறத்திலிருந்து நமக்கு மிகச் சிறந்த தீர்வுகள் கிடைப்பதற்கு - இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது - ஈமான் எனும் அசைக்க முடியாத இறை நம்பிக்கையும், ஹிதாயத் எனும் நேர்வழியில் நிலைத்திருத்தலும்  தான்! 


மேலும்....


மெய்ப்பொருள் காண்பது அறிவு! 

பகுதி - 8)

சூரா அல் ஹுஜுராத் - வசனம் 7 - "#அல்ராஷிதூன்" என்று முடிவடைகிறது. எனவே #ரஷத எனும் கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்ள இவ்வசனத்தைப் புரிந்து கொள்வதும் அவசியம்.  

 

49:7

====

அறிந்துகொள்ளுங்கள்: நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; (நீங்கள் விரும்பும்) காரியத்தில் அநேகவற்றில் அவர் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், நிச்சயமாக நீங்கள் சிரமத்திற்குள்ளாகி விடுவீர்கள், ஆயினும் நம்பிக்கையை (ஈமானை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான்// மேலும், நிராகரிப்பையும், பாவம்புரிவதையும் மாறுசெய்வதையும் உங்களுக்கு வெறுப்புக்குரியனவாய் ஆக்கினான். இத்தகையவர்களே நேரியவழியில் இருப்பவர்கள் (ராஷிதூன்கள்).  


ராஷிதூன்கள் - எனப்படும் நேர்வழி பெற்றவர்கள் யார்? அவர்களின் இலக்கணம் என்ன என்பதைத் தான் இவ்வசனம் குறித்துச் சொல்கிறது!


மேலோட்டமாக இவ்வசனத்தைப் பார்த்தாலே - உளவியல் ரீதியான இறை நெருக்கமும், அது போலவே உளவியல் ரீதியான தீமை மற்றும் பாவ வெறுப்பும் உடையவர்களே ராஷிதூன்கள் எனும் இலக்கணத்துக்குத்  தகுதியானவர்கள் - என்பது புரியும்!


ஆனால் - இந்த அத்தியாயம் இறங்கிய பின்னணியை சற்று ஆராய்ந்தால் நுட்பமான இன்னொரு விஷயம் நமக்குப் புலப்படும்! விரிவாக அல்லாமல் - சுருக்கமாக - ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வோம். 


நபியவர்களிடத்தில் - நபித்தோழர்கள் சிலர் - செய்தி ஒன்றைக் கொண்டு வருகிறார்கள்! ஆனால் அது ஒரு பொய்யான செய்தியாக வதந்தியாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே தீர விசாரித்து அறிந்து கொள்ளுங்கள் என்று கட்டளையிடுகின்றான் இறைவன்!


49:6

====

இறைநம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் ஒருவன் (ஃபாஸிக்) ஏதேனும் ஒரு செய்தி உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மைநிலையை நன்கு விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினர்க்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.


செய்தியைக் கொண்டு வந்தவர்கள் - நபியவர்கள் உடனடியாக எதிர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தப் பின்னணியுடன் அடுத்த வசனத்தின் முதற்பகுதியை நோக்குங்கள்:   


49:7 (முதல் பகுதி)

=====

அறிந்துகொள்ளுங்கள்: நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; (நீங்கள் விரும்பும்) காரியத்தில் அநேகவற்றில் அவர் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், நிச்சயமாக நீங்கள் சிரமத்திற்குள்ளாகி விடுவீர்கள்.


நபியவர்கள் - செய்தியைக் கொண்டு வந்தவர்களுக்குக் "கீழ்ப்படிந்து" அவசரப் பாடு செயல்பட்டால் - தீர விசாரிக்காததன் காரணத்தினால் யாருக்கேனும் தீங்கிழைத்து விடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்று எச்சரித்த பின்னரே - உள்வியல் ரீதியான இறை நெருக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கிறான் அல்லாஹு தஆலா!  


இங்கே தான் நாம் எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது! #ருஷ்தன் எனும் நேரான, சரியான வழியைக் கண்டடைந்திட - முதல் தேவை - உளத்தூய்மையுடன் கூடிய இறை நெருக்கம் ஆகும். அந்த இதயபூர்வமான உளத்தூய்மை - பாவச் செயல்களை முற்றிலும் வெறுக்கக் கூடியவர்களாக நம்மை மாற்றிட வேண்டும். ஆனால் இவை மட்டும் போதாது! கள நிலவரத்தைப்பற்றிய துல்லியமான உண்மையான அறிவும் - நேர்மையான செயல்பாடுக்கு மிக மிக அவசியம் என்பதைத் தான் இந்த அத்தியாயம் முன் வைக்கிறது!


கள நிலவரத்தை மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும்போது தான் - நாம் மிகச் சரியான நேர்மையான தீர்வுகளை நோக்கி நாம் நகர முடியும்! 


மெய்ப்பொருள் காண்பது அறிவு! 


பாவம் செய்பவர்களுக்கு நேரான வழிகாட்டுதல் எப்படி கிடைக்கும்? 

 பகுதி - 9 

அடுத்து... 

சூரா அல் ஹுஜுராத்தில் இன்னொரு மிக முக்கியமான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

நாம் முன்னர் சுட்டிக் காட்டிய (49:7) - ஆம் வசனத்தில் - ஃபுஸூக் (fusooq) எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இதனை பொதுவாக பாவங்கள் என்று மொழிபெயர்க்கலாம். ஃபாஸிக் (fasiq) எனும் சொல் - இதற்கு முந்தைய வசனத்தில் (49:6) வருவதையும் கவனியுங்கள். அதாவது இது பாவம் செய்பவனைக் குறிக்கும் சொல்.


எவையெல்லாம் பாவங்கள்? பாவச் செயல்களாக இந்த அத்தியாயம் எடுத்துரைப்பது என்னென்ன? 


பிறரை ஏளனப்படுத்திப் பரிகாசம் செய்தல்; 


மற்றவர்களை இழிவாகக் கருதி குறை கூறிக்கொண்டிருத்தல்;   


பிறரைத் தீய பட்டப்பெயர்களை சூட்டி அழைத்தல்; 


தேவையின்றி பிறரை சந்தேகித்தல்; 


பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிருத்தல்; 


புறம் பேசித்திரிதல் - ஆகியவை தாம்!    


இந்தப் பாவங்கள் அனைத்தையும் குறித்து சிந்தியுங்கள். இந்தப் பாவங்கள் ஒவ்வொன்றும் - மனித உறவுகளைக் குழி தோண்டிப் புதைத்திடும் பாவங்களாகும்.   Spoilers of human relations!



எனவே தான் -இரண்டு பிரிவினர் ஒருவருக்கொருவர் சண்டை மூட்டிக் கொள்ளும் நிலையொன்று |ஏற்பட்டு விட்டால் - அவர்களை சமாதானம் (இஸ்லாஹ் எனும் சீர்திருத்தம்) செய்து வையுங்கள் என்கிறான் இறைவன் பின் வரும் வசனத்தில்:


49:9 (பகுதி))

====

இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள்.


**


இறை நம்பிக்கை கொண்டிருப்பதாகச் சொல்லி விட்டு - இப்படிப்பட்ட பாவச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு  #ருஷ்தன் எனும் நேரான வழிகாட்டுதல் (solutions for our porblems) எப்படி கிடைக்கும்? 


சமூக அளவிலும் - இது சிந்தனைக்குரிய விஷயமாகும்!


ருஷ்தன் எனும் சொல்லுக்கு maturity என்றொரு பொருளும் உண்டு!

பகுதி - 10  

ஹிள்ர் (அலை) அவர்களைக் குறித்த மூன்று இறை வசனங்களை அடுத்துப் பார்ப்போம்: 


18:65

===

மேலும், அங்கு அவர்கள் நம்முடைய அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள். அவருக்கோ நம்முடைய அருளை (#ரஹ்மத் ) நாம் வழங்கியிருந்தோம். மேலும், நம் சார்பிலிருந்து சிறப்பான அறிவையும் (#இல்ம்) வழங்கியிருந்தோம்.


18:66

===

மூஸா, அவரிடம் கேட்டார்: "தங்களுக்கு கற்றுத் தரப்பட்டிருக்கும் நேர்வழியை (உல்லிம்த ருஷ்தா) நீங்கள் எனக்குக் கற்றுத் தரும் பொருட்டு நான் உங்களை நான் பின் தொடரலாமா? 


1867

====

அதற்கு அவர் பதிலளித்தார்: “என்னோடு பொறுமையாய் (#ஸப்ர் ) இருக்க நிச்சயமாக உம்மால் இயலாது.


**


ஹிள்ர் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இரண்டு சிறப்புகளை வழங்கியிருந்தான்:  (1) இறைவன் புறத்திலிருந்து சிறப்பானதொரு அறிவு (2) இறைவன் புறத்திலிருந்து வழங்கப்பட்ட ரஹ்மத் எனும் இரக்க உணர்வு.  


அந்த மூன்று சம்பவங்களின் பின்னணியில் நிலவுகின்ற யதார்த்தம் என்ன என்பதைத் தான் - இறைவன் புறத்திலிருந்து ஹிள்ர் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பான "அறிவு" என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.  அந்த யதார்த்தம் மூஸா (அலை) அவர்களுக்கு அப்போது வரை புரிந்திருக்க வாய்ப்பில்லை!  


பின்னணி புரியாத நிலையில் என்னவாகும் மூஸா (அலை) அவர்களுக்கு? அந்த நிலையில் மூஸா (அலை) அவர்களுக்குப் பொறுமை இருக்காது என்கிறார்கள் ஹிள்ர் அலை அவர்கள்!. நடந்ததும் அது தான்!  


**


இதிலிருந்து அல்லாஹ் நமக்கு என்ன கற்றுத் தருகின்றான்? 


முதலில் - எந்த ஒரு விஷயத்தை நாம் அணுகும்போதும் - அதன் பின்னணி பற்றிய யதார்த்த அறிவை நாம் பெற்றிருக்க வேண்டும். அப்போது மட்டும் தான் நாம் பொறுமையுடன் செயல்களத்தில் இறங்கிட முடியும். அதே நேரத்தில் இரக்க உணர்வும் நம்மிடத்தில் மேலோங்கியிருக்க வேண்டும். இந்த மூன்றும் அடங்கியது தான் #ருஷ்தா எனும் பக்குவப்பட்ட நேர்வழி (maturity of conduct) ஆகும்!  


ருஷ்தன் எனும் சொல்லுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பை மீண்டும் இங்கே பார்ப்போம்: 


Rushd: Integrity of actions, proper, sensible, conduct, reason, good sense, consciousness, #maturity(of the mind), full legal age...   : 


Rashaad: integrity of conduct; straightforwardness, forthrightness


ருஷ்தன் எனும் சொல்லுக்கு maturity என்றொரு பொருளும் உண்டு என்பதைக் கவனிக்க!


வழிகாட்டும் சிறந்த நட்பு! 

பகுதி - 11 


"ரஷத" - எனும் திருமறைக் கருத்தாக்கத்தை (mafhum)ஆழமாக நாம் புரிந்து கொள்ள சூரா அல் கஹ்ஃப் நமக்குப்பெரிதும் உதவி செய்கிறது. அதன் இன்னொரு இறை வசனத்தை இப்போது எடுத்துக் கொள்வோம்.


18:17 

=====

சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.  


அந்த இளைஞர்கள் நேர்வைழியில் உறிதியாக இருந்தவர்கள். அவர்களால் தங்கள் இறை நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டு அவர்கள் வசித்த ஊரில் வாழமுடியவில்லை! அந்த ஊரிடமிருந்து விலகி, ஒரு குகையில் தஞ்சம் புகுகின்றார்கள். அல்லாஹ் அவர்களை வசதியான ஒரு இடத்தில் "அமைதியாக" தூங்க வைத்து விடுகின்றான். அவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைக்குத் தீர்வாக அவர்களுக்குக் காட்டப்பட்ட ருஷ்தன் தான் - குகையில் நிம்மதியான தூக்கம்! 


ஆனால் மேற்காணும் இறை வசனத்தை முடிக்கும்போது எப்படி முடிக்கின்றான்? 


// எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.//


நேர் வழிகாட்டும் உதவியாளர் என்பதற்கான அரபி மூலச் சொல்லைக் கவனியுங்கள்! - 


"வலிய்யன் #முர்ஷிதா"


நேர்வழியில் செல்ல மறுப்பவர்களுக்கு - "வழிகாட்டும் நண்பர்"  எவரும் இருக்க மாட்டார்கள் என்றால் - நேர்வழியில் நிலைத்திருப்பவர்களுக்கு "வழிகாட்டும் நண்பர்" - நிச்சயம் உண்டு என்பது தானே பொருள்?


அப்படியானால் அந்த குகைத் தோழர்களுக்கான "வலிய்யன் முர்ஷிதா" யார்? 


இதற்கு முந்தைய வசனத்திலேயே "அவர்" இருக்கிறார்!


18:16

=====


அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்). - (ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பு)


புரிகிறதா?


அப்படியானால் உங்களின் பல்வேறு பிரச்னைகளில் உங்களுககு சரியான வழிகாட்டக்கூடிய  உங்களுக்கான வழிகாட்டும் நண்பர்கள் யார், யார்? சற்றே உங்கள் நட்பு வட்டத்தை உற்று நோக்குங்கள்! 


"இன்ஷா அல்லாஹ்!" - வில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? 

பகுதி - 12 

முதலில் பின் வரும் இரண்டு இறை வசனங்களையும் கவனியுங்கள்:


18:23-24

========

(நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் "நிச்சயமாக நான் அதை நாளைக்குச் செய்துவிடுவேன்'' என்று  நீர் கூற வேண்டாம் (18: 23). இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று சேர்த்துச் சொன்னாலே தவிர;  நீர் இதை மறந்து விட்டால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; "இன்னும் இவ்விஷயத்தில் இதைவிட நேர்மைக்கு நெருக்கமானவற்றின் பக்கம் என் இறைவன் எனக்கு வழிகாட்டக் கூடும்" என்றும் கூறுவீராக. (18:24)


***


நாம் செய்ய நினைக்கின்ற எந்த ஒரு செயலுக்கும் முன்னதாக - இன்ஷா அல்லாஹ் -  இறைவன் நாடினால் - என்று சொல்ல வேண்டியதன் அவசியத்தை நாம் அறிந்தே இருக்கின்றோம்.   அவ்வாறு சொல்ல மறந்து விட்டாலும் இறைவனை நினைவு படுத்திக் கொள்வதன் அவசியத்தையும் இந்த வசனம் நமக்கு நினைவூட்டுகிறது! 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது இறை வசனத்தின் இறுதியிலும் #ரஷதா எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது!  அதாவது இன்ஷா அல்லாஹ் என்று நாம் சொல்வதனால் நமக்கு இறைவன் புறத்திலிருந்து மிகச் சிறந்த  நேர்வழியொன்று கிடைக்கக் கூடும் என்பதையே  இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது.


இதில் நமக்கு என்ன படிப்பினை? 


எந்த ஒரு பிரச்னையின்போதும், நம்மாலான எல்லாவிதமான ஆய்வுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பிறகும் கூட, நாம் ஒரு சிறப்பான முடிவை எட்டி விட்டதாகத் தோன்றும் தருணத்தில் கூட - நமக்கு "ஆணவம்" தலை தூக்கிவிடக் கூடாது என்பதைத் தான் "இன்ஷா அல்லாஹ்" நமக்குக் கற்றுத்தருகிறது!     


அப்படி ஒருகால் - நாம் இன்ஷா அல்லாஹ் - சொல்ல மறந்து விட்டால் - #திக்ர் எனும் இறை சிந்தனையின் பக்கம் திரும்பி விடுங்கள் என்று அழைப்பு விடுக்கிறான் இறைவன்! இது நமக்கு எதனை உணர்த்துகிறது என்றால் - மிக மிக அதிகமாக நாம் உளப்பூர்வமான இறை சிந்தனையில் திளைத்திருக்கும் போதெல்லாம் - அல்லாஹ் நமக்கு #ருஷ்தன் எனப்படும் மிகச் சிறந்த வழிகாட்டுதல்களை (the best practical solutions) வழங்கத் தவறவே மாட்டான் என்பது தான்!


ஆனால் நாம் இன்ஷா அல்லாஹ் என்பதனை - மிகச் சர்வ சாதாரணமாகவே எடுத்துக் கொண்டிருக்கிறோம்! பணிவில்லாமல் சொல்லப்படுகின்ற "இன்ஷா அல்லாஹ்வுக்கு" எந்த மதிப்பும் இல்லை என்பதனை நாம் மறந்து விடக் கூடாது! 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்!

வஸ்ஸலாம் 

Comments